கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்!

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வரும் அரசுப் பேருந்துகள், கனரக வாகனங்கள் அனைத்தும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடந்து சர்வீஸ் சாலைக்குள் நுழைந்து நகருக்குள் வருகின்றன.

குறிப்பாக, இந்த சர்வீஸ் சாலை வழியாக, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்து பேருந்துகளும் செல்கின்றன. இச்சாலையில் விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருவதாக வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிலர் கூறும்போது, சுங்கச்சாவடியில் இருந்து நகருக்குள் வரும் சர்வீஸ் சாலையில் கனரக வாகனங்கள், லாரி, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களை பழுது பார்க்கும் பட்டறைகளும், வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் அமைந்துள்ளன. இங்கு பழுதுபார்க்க வரும் கனரக வாகனங்கள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இதனால், அவ்வழியே பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் போக்குவரத்து சிரமத்துடன் செல்கின்றன. சில நேரங்களில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதேபோல், நகரில் இருந்து ஓசூர் நோக்கிச் செல்லும் சில வாகனங்கள் சர்வீஸ் சாலையில் எதிர்திசையில் செல்கின்றன. இதனால், சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் ஆகியவற்றால், நகருக்குள் செல்லும் பேருந்துகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விபத்துகள் நிகழ்வதற்கு முன்பே, சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரும் கண்காணித்து வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE