திண்டுக்கல், கரூர் மாவட்ட எல்லையில் தேவாங்கு சரணாலய பணி ஓராண்டுக்குள் நிறைவடையும்!

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல், கரூர் மாவட்ட எல்லையில் அமையவுள்ள நாட்டின் முதல் தேவாங்கு சரணாலயத்தின் உள்கட்டமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேவாங்குகள் பாலூட்டி வகையை சேர்ந்தவை. இவை இரவு நேரங்களில்தான் வெளியில் வரும். மரங்களில் வாழக்கூடியது. வாழ்நாளில் பெரும் பகுதியை இவை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனத்தை பாதுகாக்க சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேவாங்கு அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் அறிவித்துள்ளது. தேவாங்குகளின் அழிவை தடுக்கும் வகையில், அவற்றின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல், இந்த விலங்குக்கான அச்சுறுத்தலை தவிர்த்து பாதுகாப்பாக வாழ இடம் அமைத்துக் கொடுத்தல் ஆகியவற்றின் மூலமே தேவாங்கு இனத்தைப் பாதுகாக்க முடியும்.

இந்நிலையில், தேவாங்கு அதிகம் வாழும் பகுதியான திண்டுக்கல், கரூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மலை சார்ந்த வனப்பகுதியை கண்டறிந்து தேவாங்கு சரணாலயம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதியில் நாட்டின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுத்து 2022-ம் ஆண்டு அக்டோபரில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

தேவாங்கு சரணாலயத்துக்கான எல்லைகள் திண்டுக்கல், கரூர் மாவட்ட வனப்பகுதியை அடங்கியதாக உள்ளது. இதனால் சரணாலயம் அமைக்கும் பணிகளை திண்டுக்கல், கரூர் மாவட்ட வன அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே எல்லைகள் வரையறுக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தேவாங்கு சரணாலயம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த மாநில வனத்துறை அதிகாரிகள் அவ்வப்போது காணொலி மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேவாங்கின் வாழ்விட மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. திட்ட அறிக்கை விரைவில் மாநில அரசிடம் வழங்கப்படும். தேவாங்குகள் அதிகமாக ஊஞ்ச மர உச்சியைத்தான் தங்கள் வாழ்விடமாக கொண்டுள்ளன.

அந்த மரத்தின் இலைகள், பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். இதற்காக சரணாலய பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஊஞ்ச மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அவற்றிற்கான நீர் ஆதாரங்களை அதிகரிப்பது, பாதுகாப்பு பணிக்கான சரணாலய பகுதிகளில் வன அலுவலர்கள் ரோந்து செல்வது, தேவாங்கு சிறப்புகளை மக்களுக்கு விளக்கும் வகையில் கண்காட்சி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சரணாலயத்தில் செயல்படுத்தப்படும். இந்த பணிகள் முடிவடைந்து முழுமையாக சரணாலயம் அமைய ஓராண்டாகும்.

தற்போது தேவாங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட கரூர் மாவட்ட வனப்பகுதியில் 6,000 தேவாங்குகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சரணாலயத்தின் திண்டுக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் 5,000 தேவாங்குகள் உள்ளன. தேவாங்குகளுக்கு தேவையான வாழ்விடம், பாதுகாப்பு, நீர் ஆதாரத்தை ஏற்படுத்திவிட்டால், இன்னும் 10 ஆண்டுகளில் தேவாங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிடும். இதன் மூலம், இந்த இனத்தை அழிவிலிருந்து காத்துவிடலாம் என்று கூறினர்.

தேவாங்கின் சிறப்பு அம்சங்கள்: தேவாங்கு இரவு நேரத்தில் மட்டுமே இரை தேடி வெளியே வரும். மிகவும் பயந்த சுபாவம் கொண்ட விலங்கு. பார்ப்போருக்கு பரிதாபத்தை வரவழைக்கும் தோற்றத்தை கொண்டுள்ளது. பாலூட்டி வகையை சேர்ந்தது. விவசாய பயிர்களை பாதிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொண்டு விவசாயிகளின் நண்பனாகவும் திகழ்கிறது. வனப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தேவாங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

எந்த திசைநோக்கி தேவாங்கு நகர்ந்து சென்றாலும் அது வடக்கு திசையை நோக்கித்தான் அமரும். இதனால் பண்டைய காலத்தில் கடல் வணிகம் செய்பவர்கள், கடலில் திசை மாறி சென்றுவிடாமல் இருக்க, திசையை அறிவதற்காக தேவாங்கை உடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE