8 மாதங்களில் 20 டன் இயற்கை உரம்: திடக்கழிவு மேலாண்மையில் அசத்தும் கேத்தி பேரூராட்சி

By ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த கேத்தி பகுதிக்குட்பட்ட பிரகாசபுரத்தில் சுமார் ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது வளம் மீட்பு பூங்கா. பெயருக்கேற்ப குப்பை தளத்தின் முகப்பு பகுதியில் பல்வேறு மலர்ச் செடிகள் அணிவகுத்து பூங்காவாகவே காட்சியளிக்கிறது.

இந்த மலர்ச்செடிகள் இயற்கை உரத்தால் செழிப்பாக வளர்ந்துள்ளன. நகரில் அன்றாட சேகரமாகும் குப்பை கொட்டப்பட்டு, மக்கும் குப்பை இயற்கை உரமாகவும், மக்காத குப்பை மறு சுழற்சிக்கும் உட்படுத்தப்படுகிறது. குப்பையை கையாளும் பணியில், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், சுய உதவிக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலையில் வீடு, வீடாக சென்று குப்பையை சேகரிக்கும் தொழிலாளர்கள், தரம் பிரிக்கப்பட்ட குப்பையை பாத்திகளில் கொட்டி உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். நாளொன்றுக்கு 3 டன் குப்பை கையாளப்படுகிறது.

இங்கு பணிபுரியும் ஊழியர்கள், இயற்கை உரம் தயாரிக்க ஒரு மாடு, கோழிகள் மற்றும் ஆடுகளை வளர்க்கின்றனர். இது மட்டுமின்றி தமிழகத்திலேயே முதன்முறையாக, இங்கு மனித கழிவுகளில் இருந்தும் உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த பூங்கவை தமிழ்நாடு பசுமை தீர்ப்பாய தலைவரும், நீதிபதியுமான ஜோதிமணி ஆய்வு செய்து பாராட்டியுள்ளார். மேலும், இங்கு குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன.

கேத்தி பேரூராட்சி பகுதியில் பசுமையாக காணப்படும் வளம் மீட்பு பூங்காவில்
கழிவுகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள்.

இதுதொடர்பாக கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் பி.நட்ராஜ் கூறும்போது, "கேத்தி பேரூராட்சிக்குட்பட்டு 18 வார்டுகள் உள்ளன. இதில், 15 வார்டுகளில் சுமார் 10 ஆயிரம் வீடுகளில் இருந்து குப்பை சேகரிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு மக்கும் குப்பை 2.180 டன், மக்காத குப்பை 0.820 டன் சேகரிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநரின் வழிகாட்டு தலின்பேரில், மக்கும் குப்பையை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரம் ஒரு கிலோ ரூ.2-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், கடும் கிராக்கி காரணமாக தற்போது ரூ.6-க்கு விற்கப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் 20 டன் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இருப்பில் இருந்த உரம் விவசாயி களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 1.5 டன் உரம் இருப்பில் உள்ளது. இந்த உரத்துக்கு விவசாயிகள் முன்பதிவு செய்துள்ளனர்" என்றார்.

இதனால், காலம்காலமாக வேதி உரங்களை மட்டுமே பயன்படுத்தி வந்த விவசாயிகள், மலட்டு தன்மை அடைந்த தங்களுடைய விளை நிலங்களுக்கு இயற்கை உரத்தை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE