ரோடு இருக்கு... கோடு இல்லை... இது திருச்சி மாநகரின் சாலை நிலைமை!

By KU BUREAU

திருச்சி: திருச்சி மாநகரில் சாலைகள் மற்றும் சிக்னல் பகுதியில் சாலை விதிகளை மதித்து செல்வதற்காக வரையப்பட்ட வழிகாட்டி கோடுகள், எச்சரிக்கை குறியீடு கோடுகள் அழிந்துவிட்டன. அவற்றை மீண்டும் வரைய மாநகராட்சி நிர்வாகத்துக்கு சாலைப் பயனீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் செல்பவர்களுக்கு உதவும் வகையிலும், அவர்களது பாதுகாப்பை கருதியும் சாலைகளில் கட்டாயக் குறியீடுகள், எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் தகவல் குறியீடுகள் வரையப்படுகின்றன. குறிப்பாக சிக்னல் பகுதியில், பாதசாரிகள் சாலையை பாதுகாப்பாக கடந்து செல்வதற்காக ‘ஜீப்ரா’ கோடுகளும்(வரிக்கோடுகள்), குறிப்பிட்ட இடத்தை தாண்டி வாகனங்களை நிறுத்தாமல் இருக்க வெள்ளைக் கோடும் வரையப்பட்டிருக்கும்.

இதுதவிர, சாலையின் நடுவிலும், ஓரத்திலும் (மிதிவண்டிகள் செல்ல) வெள்ளை கோடுகள் இருக்கும். அத்துடன் சாலையின் வலது, இடது பக்கம் திரும்புவதற்கும், ‘யு-டர்ன்’ செல்லுவதற்கும் சாலைக் குறியீடுகள் வரையப்பட்டிருக்கும். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் வரையப்பட்டிருந்த எச்சரிக்கை குறியீடு கோடுகள், பாதசாரிகள் கடக்கப் பயன்படுத்தும் ஜீப்ரா கோடுகள் போன்றவை அழிந்துவிட்டன. அந்தக் கோடுகளை மீண்டும் மாநகராட்சி நிர்வாகம் வரைய வேண்டும் என சாலைப் பயனீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மையப்பகுதியிலும், ஓரத்திலும் கோடுகள் வரையப்படாமல்
உள்ள திருச்சி பாரதிதாசன் சாலை.

இதுகுறித்து சாலைப் பயனீட்டாளர் சங்கத்தைச் சேர்ந்த சரவணன் கூறியது: ஜீப்ரா கோடுகள் என்பது பாதசாரிகள் கடப்பதற்காக சாலையின் நடுவே போடப்பட்டிருக்கும். ஜீப்ரா கோடுகள் அல்லாத இடத்தை விட்டுவிட்டு ஒருவர் சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கினால், இழப்பீடு கோர முடியாத நிலை ஏற்படும். அதேபோல, சிக்னல்களில் வெள்ளைக்கோட்டை தாண்டி வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடப்பதாலும், பல்வேறு சாலைப் பணிகளாலும் திருச்சி மாநகர சாலைகளில் பெரும்பாலான இடங்களில் இந்த ஜீப்ரா கோடுகள், சிக்னல் வெள்ளைக் கோடுகள் உள்ளிட்ட பல்வேறு சாலைக் குறியீடு கோடுகள் அழிந்துவிட்டன. எனவே மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் உரிய எச்சரிக்கை குறியீடு கோடுகளை வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE