சாட்ஜிபிடி சரிதம் -22; சாட்ஜிபிடி சரிகிறதா... பாதை விலகுகிறதா?

By சைபர்சிம்மன்

இனி எல்லாமே ஏஐ, சகலமும் சாட்பாட் சாம்ராஜ்யமே... என்ற நம்பிக்கையில், சாட்ஜிபிடிக்கு மாற நினைப்பவர்கள் கொஞ்சம் யோசித்து செயல்படுவது நல்லது. ஏனெனில், சாட்ஜிபிடியின் செயல்திறன் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகத் துவங்கியிருக்கின்றன. அதாவது புத்திசாலியாக தோன்றிய சாட்ஜிபிடி திடீரென மக்குத்தனம் காட்டத் தொடங்கியிருக்கிறது. சாட்ஜிபிடி அபிமானிகளுக்கு இது அதிர்ச்சி அளிக்கலாம். சாட்ஜிபிடியை விலகி நின்று ஆர்வத்தோடு கவனித்து வருபவர்களுக்கும் இது குழப்பத்தையும் ஏற்படுத்தலாம்.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த அறிமுக இயக்குனர் அதன் பிறகு அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுப்பது போன்ற நிலை சாட்ஜிபிடிக்கு உண்டாகியிருக்கிறது.

சாட்ஜிபிடி அதன் செயல்பாடுகளால் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ஆய்வாளர்களும் அதன் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். சாட்ஜிபிடியின் வெற்றி ரகசியத்தையும், செயல்பாடு சூட்சுமத்தை புரிந்துகொள்ளும் வகையிலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் பெர்க்லி மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலை ஆய்வுக்குழு, ’சாட்ஜிபிடி செயல்திறன் மங்கத்துவங்கியிருக்கிறது’ என தெரிவித்துள்ளது. மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சாட்ஜிபிடி எளிதான கணிதம் மற்றும் கோடிங் போன்றவற்றில் பிழையான பதில்களை அளிப்பதாக இக்குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது. ஜிபிடி 3.5 மற்றும் ஜிபிடி 4 ஆகிய வடிவங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவை தெரிய வந்துள்ளன.

சாட்ஜிபிடி -ஏஐ விலகல்

பொதுவாக ஏஐ மென்பொருள்கள் கணிதம் சார்ந்த விஷயங்களில் துல்லியமாக செயல்படக்கூடியவை என கருதப்படும் நிலையில், கணிதம் சார்ந்த கேள்விகளுக்கு சாட்ஜிபிடி பிழையான பதில் தருவதாக தெரிய வந்திருப்பது உண்மையில் கவலை அளிக்கும் விஷயம் தான்.

ஆய்வாளர்கள் மட்டும் அல்ல, பயனாளிகளும் கூட சாட்ஜிபிடியின் ஆரம்ப சுறுசுறுப்பு குறையத் துவங்கியிருப்பதை கவனித்துள்ளனர். டிவிட்டரிலும், இன்னபிற சமூக ஊடகங்களிலும் பயனாளிகள் பலர் சாட்ஜிபிடியின் வேகம் குறைந்து, பதில்களில் தவறுகள் அதிகரித்திருப்பது பற்றிய தகவலை பகிர்ந்து காரசாரமாக விவாதித்து வருகின்றனர். ஒரு சில பயனாளிகள், ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியின் செயல்பாட்டை திட்டமிட்டு குறைத்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

சாட்ஜிபிடியும் மனிதர்கள் போலவே களைப்பாகி விட்டதா? எல்லாம் வல்ல சாட்பாட் என கருதப்பட்ட சாட்ஜிபிடியின் இந்த சறுக்கலுக்கு என்ன காரணம்? சாட்ஜிபிடியை இனி நம்பிக்கையோடு பயன்படுத்தலாமா? இப்படி அடுக்கடுக்காக பல கேள்விகள் எழுகின்றன.

நிச்சயம் இது சாட்ஜிபிடிக்கான சோதனை தான். ஆனால் முற்றிலும் எதிர்பாராத ஒன்றல்ல. சாட்ஜிபிடி அதன் அடிப்படை நோக்கத்தில் இருந்து விலகத் துவங்கியிருக்கிறது. இது இயல்பானதே என்றே ஏஐ வல்லுனர்கள் சொல்கின்றனர்.

சாட்ஜிபிடி - ஏஐ விலகல்

சாட்ஜிபிடி போன்ற ஏஐ மென்பொருள்கள் தொடர்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த விலகல். தொழில்நுட்ப மொழியில் இதை ஏஐ டிரிப்ட் (AI drift ) என்கின்றனர். குறிபிட்ட ஒரு ஏஐ மென்பொருள் அதன் மூல நோக்கம் மற்றும் கட்டளைகளுக்கு மாறாக செயல்படும் போக்கை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாக, பயனாளிகள் எதிர்ப்பார்ப்பதற்கு மாறான பதில்களும், பலன்களும் கிடைக்கலாம்.

சாட்ஜிபிடி என்றில்லை, எந்த ஒரு ஏஐ சாட்பாட் அல்லது ஏஐ மென்பொருளுக்கும் நேரக்கூடிய அனுபவம் தான் இது என்கின்றனர். ஏஐ மென்பொருள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் போது, அதன் செயல்பாட்டில் இத்தகைய பிறழ்வுகள் ஏற்படலாம் என்கின்றனர். ஏஐ மென்பொருளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட்ட தரவுகளில் இருந்து வேறுபட்ட தரவுகளை எதிர்கொள்ள நேரும் போது, அந்த மாற்றத்தை கையாள முடியாமல் ஏற்படும் குழப்பம் இது என்றும் புரிந்து கொள்ளலாம்.

ஏஐ விலகல் என்பட்து, மாதிரி சார்ந்தும் நிகழலாம், தரவுகள் சார்ந்தும் நிகழலாம். சாட்பாட்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, புதிய தரவுகள் கொண்டு பயிற்சி அளிக்கும் போது அல்லது, அதனை இயக்கும் அல்கோரிதத்தில் குறிப்பிட்ட மாற்றத்தை செய்யும் போதோ, ஏற்கனவே செயல்பட்டு வந்த பாதையில் இருந்து விலகி, மாறுபட்ட பலன்களை அளிக்கலாம்.

சாட்ஜிபிடி

ச்சாட்ஜிபிடி விஷயத்தில் இப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. தொடர்ந்து அதன் செயல்பாட்டை பட்டத்தீட்டுவதற்காக, ஓபன் ஏஐ நிறுவனம் செய்துள்ள மாற்றத்தின் விளைவாக சாட்ஜிபிடி தனது வழக்கமான செயல்பாடுகளில் தடுமாறத்துவங்கியுள்ளது. சாட்ஜிபிடி திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புகார்களை மறுத்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம், மாறாக அதன் செயல்திறன் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

சாட்ஜிபிடி போன்ற மொழி மாதிரிகளை அடிப்படையாக கொண்ட ஏஐ சாட்பாட்களில், புதிய அம்சங்களை புகுத்தும் போது, ஏற்கனவே பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட்ட தரவுகளில் இருந்து அவை மாறுபட்டிருந்தால் சாட்பாட்டின் செயல்பாட்டில் திசைமாற்றத்தை எதிர்பார்க்கலாம். ஆக, இந்த விளக்கத்தின்படி பார்த்தால்,சாட்ஜிபிடியில் பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை என்று கருதலாம். சாட்ஜிபிடி பாதையில் இயல்பாக எதிர்கொள்ளக்கூடிய பிறழ்வு தான் இது.

இந்த பிரச்சனைக்கு தீர்வாக சாட்ஜிபிடிக்கு புதிதாக பயிற்சி அளிக்க வேண்டும். அதே நேரத்தில் பயனாளிகள் அதை வேறுவிதமாக பயன்படுத்தினால் மீண்டும் அதன் செயல்திறன் பாதிக்கப்படலாம்... மீண்டும் அதற்கு பயிற்சி தேவைப்படலாம். எனவே, சாட்ஜிபிடிக்கு தொடர் தொடர் பயிற்சி தேவைப்படுகிறது. இந்த பயிற்சி மிகவும் செலவு பிடிக்கக்கூடியது. இப்படி பயிற்சி அளிக்க, கடந்த வாரங்களில் நாம் பார்த்த செயற்கை தரவுகள் உதவியாக இருக்கும் என்கின்றனர். ஏஐ மென்பொருள் செயல்பாட்டை புதிய நோக்கில் மேம்படுத்தும் தேவை ஏற்படும் போது திடீரென நிஜ உலக தரவுகளை நாடுவதை விட, பொருத்தமான செயற்கை தரவுகளை பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.

இந்த இடத்தில் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ மென்பொருள்கள் தொடர்பான நம் புரிதலும் மேம்பட வேண்டும். சாட்ஜிபிடியின் ஆற்றல் தொடர்பான ஆரம்ப கட்ட மிகை பரபரப்புக்கு பிறகு இப்போது தரையில் இறங்குவதற்கான நேரம். ஏஐ மென்பொருள்கள் எண்ணற்றவற்றை செய்து முடிக்க வல்லவை. ஆனால், அவற்றில் குறைகளும், இடர்களும் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.

சாட்ஜிபிடி மாடல் விலகல்

சாட்ஜிபிடியை பொருத்தவரை ’ஏஐ விலகல்’ அதன் இடர் அம்சங்களில் ஒன்று. இதனால் அதன் பதில்கள் பிழையாகலாம். செயல்பாட்டில் சுணக்கம் ஏற்படலாம்.

சாட்ஜிபிடி கதை எழுதும், நாவல் எழுதும் என்று சொல்லப்பட்டதெல்லாம் சரி தான். ஆனால் அதற்காக இனி எழுத்தாளர்களுக்கே தேவையில்லாமல் போகும் எனும் முன் முடிவுக்கு வருவது பெரும் பிழையாக அமையும். அது மட்டும் அல்ல, தொடர்ந்து வேலை வாங்கும் போது சாட்ஜிபிடியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. சாட்ஜிபிடியின் கதை எழுதும் ஆற்றல் புதுமையாக இருக்கலாம். ஆனால் அதன் கதை எழுதும் திறன் எந்த அளவு சீராகவும், செழுமையாகவும் இருக்கும் என்பது கேள்விக்குறியே.

எனவே, சாட்ஜிபிடி நிபந்தனைகளுடனும், விதிகளுடனும் வரும் சேவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். அடிப்படையில் சாட்ஜிபிடி ஒரு கருவி மட்டுமே என்பதையும் இந்த இடத்தில் மீண்டும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். மனிதர்கள் வேலையை அதனால் எளிதாக்க முடியும். ஆனால் மனிதர்களுக்கு பதிலாக சாட்ஜிபிடி செயல்படும் என்று நினைத்தால், அதற்கான விலை கொடுக்க நேரிடும். ஏஐ மென்பொருள்களை அவற்றின் எல்லைகளையும், வரம்புகளையும் புரிந்து கொண்டே பயன்படுத்த வேண்டும்.

ஏஐ மென்பொருள்களின் எல்லைகளையும், வரம்புகளையும், இன்னும் பிற பிரச்சனைகளையும் தொடர்ந்து பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE