விண்வெளிக்கு பெண் ரோபோவை அனுப்புகிறது இந்தியா...யார் இந்த 'வியோமித்ரா'?

By காமதேனு

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டத்தில், முதல்கட்டமாக இந்தியா பெண் ரோபோ "வியோமித்ரா"வை அனுப்பவுள்ளதாக என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலத்தையும் செப்டம்பர் 2-ல் விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. இந்த நிலையில் மற்றொரு மகிழ்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.

ஜிதேந்திர சிங்

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், "தொற்றுநோய் காரணமாக ககன்யான் திட்டம் தாமதமானது. இப்போது அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் முதல் சோதனைப் பயணத்தைத் திட்டமிடுகிறோம். விண்வெளி வீரர்களை அனுப்புவது போலவே அவர்களைத் திரும்பக் கொண்டுவருவதும் முக்கியம்.

எனவே, இரண்டாவது கட்டமாக ‘வியோமித்ரா’ எனும் ஒரு பெண் ரோபோ விண்வெளிக்கு அனுப்பப்படும். அது அனைத்து மனித செயல்பாடுகளையும் பிரதிபலிக்கும். இது எல்லாம் சரியாக நடந்தால், அடுத்ததாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவோம்" என்று கூறினார்.

பெண் ரோபோ வியோமித்ரா

'வயோமித்ரா' இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பெண் தோற்றமுள்ள ரோபோவாகும். ககன்யான் விண்வெளிப் பயணத்திற்காக இந்த பெண் ரோபோ இஸ்ரோவால் உருவாக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE