திண்டுக்கல்: வளங்கள் பல இருந்தும் வளர்ச்சி அடையாத மாவட்டமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திண்டுக்கல் மாவட்டம். இனியாவது, அசுர வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல், 1985ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் இருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உருவானது. தொடக்கத்தில் அண்ணா மாவட்டம் என்று அழைக்கப்பட்ட திண்டுக்கல், பிறகு காயிதே மில்லத் மாவட்டம் என அழைக்கப்பட்டது. மாவட்டங்களுக்கு தலைவர்களின் பெயர்களை தவிர்க்க வேண்டிய நிலை வந்தபோது திண்டுக்கல் மாவட்டமானது.
திண்டுக்கல் மாவட்டம் விவசாயம், கனிமவளம், ஆறுகள், மலைகள், தொழில், சுற்றுலா, ஆன்மிகம் என அனைத்து வளங்களையும் கொண்டுள்ளது. இவற்றை முறையாக பயன்படுத்தாததன் விளைவு பல வளங்கள் இருந்தும் மாவட்டம் பிரிக்கப்பட்டு 39 ஆண்டுகள் முடிவடைந்தும் இன்னும் வளர்ச்சியடையாத நிலையில் தான் உள்ளது.
விவசாயம்: காய்கறிகள் விளைச்சலில் முதன்மை யான மாவட்டமாக திண்டுக்கல் திகழ்கிறது. ஒட்டன்சத்திரத்தில் உள்ள பெரிய காய்கறி சந்தை தென் தமிழகத்திலேயே அதிகம் காய்கறிகளை சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறது. விலை குறைவாக காய்கறிகள் விற்கும் காலங்களில் அவற்றை மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றி விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
» திருவண்ணாமலையில் ரூ.30.15 கோடியில் அமையும் புதிய பேருந்து நிலையம் - எதிர்பார்ப்பு என்ன?
» நீலகிரியில் நீர்த்துப் போகிறதா விலையில்லா சைக்கிள் திட்டம்?
உதாரணமாக தக்காளி ஜூஸ் ஆலை, சாஸ் தயாரித்தல் உள்ளிட்ட மதிப்புக் கூட்டு பொருட்களை தயாரிக்க தொழிற்சாலைகளை உருவாக்குவது, முருங்கைக்காய், கீரை ஆகியவற்றை மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த எந்தவித நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை என்பது விவசாயிகளை வருத்தமடையச் செய்துள்ளது.
இதேபோல் கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும் பூண்டு, உருளை, கேரட், பீன்ஸ் உள்ளிட்டவைக்கு உரிய விலை கிடைத்திட வேண்டும். உழைக்க தயாராக இருக்கும் விவசாயிகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சுற்றுலா: கோடை வாசஸ்தலமான கொடைக்கானலில் போக்குவரத்து நெரி சலை தவிர்க்க முறையான பார்க்கிங் வசதி இல்லை. இதற்கு ‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ அமைக்க பல ஆண்டு களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர எவ்வித நடவடிக்கையும் இல்லை. மலைகிராம சுற்றுலாவை ஊக்குவிக்காதது மற்றும் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களால் வளர்ச்சி பெறாத நிலையே நீடிக்கிறது.
தொழில்: திண்டுக்கல் பூட்டு உலகப் பிரசித்தி பெற்றது. இதற்கு புவிசார் குறியீடு பெற்றும் தொழிலில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பூட்டு தயாரிப்போர் தவித்து வருகின்றனர். நசிந்து வரும் பூட்டு தொழிலால் அடுத்த தலைமுறையில் பூட்டு தயாரிக்க ஆளே இருக்க மாட்டார்கள் என்பதே தற்போதைய நிலை.
நகரில் மற்றுமொரு தொழிலான தோல் பதனிடும் தொழில் சுற்றுச்சூழல் பாதிப்பு என முற்றிலும் முடக்கப்பட்டு விட்டது. வேடசந்தூர் பகுதியில் உள்ள நூற்பாலைகளும் வளர்ச்சியடையாமலே உள்ளன. தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில் இம்மாவட்ட இளைஞர் கள் வேலைவாய்ப்பு தேடி பிற மாவட்டங் களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
ஆன்மிக தலம்: உலக புகழ்பெற்ற ஆன்மிகத் தலமும் முருகனின் மூன்றாம் படைவீடுமான பழநி இருந்தபோதும், அடிப்படை தேவைகளுக் காக உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பக்தர் களும் தவிக்கின்றனர். பக்தர்கள் பழநியில் தங்கி செல்ல ஏதுவாக ரங்கத்தில் கட்டப்பட்டது போல் பெரிய அளவில் பல அறைகளை கொண்ட யாத்ரிகா நிவாஸ் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை.
புனித நதியான சண்முகாநதி மற்றும் புனித குளமான இடும்பன் குளம் ஆகியவை கழிவுநீர் தேங்கி பக்தர்கள் நீராட முடியாமல் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.
நகரின் வளர்ச்சி: திண்டுக்கல் நகரம் மாநகராட்சியாக்கப் பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையிலும் எல்லை விரிவாக்கம் இன்றி எந்த திட்டம் கொண்டு வரப்பட்டாலும் அவற்றை செயல்படுத்த முடியாத நிலையே உள்ளது. உதாரணமாக புதிய பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆகியும் இடம் இல்லாததால் கட்ட முடியாத நிலையில் முடங்கியுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியுடன் இதனை சுற்றியுள்ள பத்து கிராம ஊராட்சிகளை இணைக்க பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டும் இதுவரை செயல் படுத்தப்படாதது நகர வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல வளங்கள் இருந்தும், அவற்றைக் கொண்டு முன்னேற்றப் பாதையில் செல்ல வழி தெரியாமல் மாவட்ட நிர்வாகம் தவித்து வருகிறது. இருக்கும் வளத்தை கொண்டு குதிரை வேகத்தில் செல்லவேண்டிய நிலையில், ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது மாவட்டத்தின் வளர்ச்சி என்பதே யதார்த்தம்.