நீலகிரியில் நீர்த்துப் போகிறதா விலையில்லா சைக்கிள் திட்டம்?

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: மலைப்பாங்கான நீலகிரி மாவட்டத்தில் சைக்கிளை ஓட்ட முடியாமல் மாணவர்கள் அவதியடைந்து வரும் நிலையில், பல வீடுகளில் விலையில்லா மிதிவண்டிகள் காட்சிப் பொருளாகவும், பழைய இரும்புக் கடையிலும் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், 53 பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2023-24-ம் கல்வி ஆண்டில் 4,087 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் மலைப்பாங்கான நிலப்பரப்பை கொண்டுள்ளதால், இங்கு மிதிவண்டி பயன்பாடு மிகவும் குறைவு. மலைப்பாதையில் மிதிக்க முடியாமல் தள்ளி செல்ல வேண்டிய நிலையும், பள்ளத்தில் பயணிக்கும்போது பயத்துடனே பயணிக்க வேண்டிய நிலையும் இருப்பதால், பெரும்பாலான மாணவர்கள் சைக்கிள் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.

பள்ளிகளில் வழங்கப்படும் மிதிவண்டிகளை மாணவர்கள் பயன்படுத்தினாலும், மாணவிகள் பயன்படுத்துவதில்லை. இதனால், பல வீடுகளில் அரசின் மிதிவண்டிகள் காட்சி பொருளாகவே உள்ளன. இங்குள்ள மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், மாற்றுத்திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் சு.மனோகரன் கூறியதாவது: நீலகிரியில் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இங்குள்ள காலநிலை, மேடு, பள்ளமான பாதைகள் முக்கிய காரணம். நீலகிரியில் மிதிவண்டி பயன்பாடு குறைவு. மிதிவண்டிக்கு பதிலாக மாணவ, மாணவிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் தனித்தனியாக சிறப்புப் பேருந்துகளை காலை, மாலை நேரங்களில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், எந்த பயனும் இல்லை.

அதிமுக ஆட்சியில் சமவெளிப் பகுதிகளுக்கு மின்விசிறி வழங்கப்பட்ட போது, மலை மாவட்டத்துக்கு மின்விசிறியால் பயனில்லை எனக்கூறி, மின்காந்த அடுப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை பரிசீலித்த அப்போதைய அதிமுக அரசு, நீலகிரி மக்களுக்கு மின்காந்த அடுப்பு வழங்கியது. அதை பின்பற்றி நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு மழைக் காலத்தில் பயன்படுத்தும் மழை உடை, காலணி, தொப்பி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும், என்றார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறும்போது, ‘‘மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி என 53 பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது அரசின் கொள்கை முடிவு. பெற்றோரின் கோரிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மூலம் அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE