ஜப்பானின் முதல் தனியார் செயற்கைக்கோளை ஏந்திய ராக்கெட், இன்று ஏவப்பட்ட சில விநாடிகளில் வெடித்துச் சிதறி இருக்கிறது.
ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஒன், புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் அந்நாட்டின் முதல் தனியார் செயற்கைக்கோளினை ஏவிய பெருமைக்கு சொந்தம் கொண்டாட திட்டமிட்டிருந்தது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் பாணியில், ஜப்பானின் செயற்கைக்கோள்களை ஏவும் திட்டத்தில் இறங்கியிருந்தது. புகழ்பெற்ற கேனான் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 3 தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய ஜப்பானிய தொழில்நுட்ப வணிகங்களின் குழுவால் ஸ்பேஸ் ஒன் 5 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது.
மேற்கு ஜப்பானில் உள்ள வகயாமா மாகாணத்தின் ஸ்பேஸ் ஒன் நிறுவனத்துக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து, அரசின் சிறிய சோதனை செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இன்று விண்ணுக்கு பாய்ந்தது. 18 மீ உயரத்தில் திட எரிபொருள் சார்ந்து இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்ட கைரோஸ் ராக்கெட் ஜப்பான் விண்வெளித்துறையின் நம்பிக்கைக்கு உரியதாகும். ஆனால் இன்றைய தினம் சோதனை செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட சில விநாடிகளில் கைரோஸ் வெடித்துச் சிதறியது. இந்த அசம்பாவிதம், ஜப்பான் விண்வெளித்துறையில் தனியார் அடியெடுப்புக்கு விழுந்த பெருத்த அடியாக பார்க்கப்படுகிறது.
ஜப்பான் அரசுக்கான சோதனை முயற்சி ஒன்றை ஸ்பேஸ் ஒன் செயல்படுத்த முயன்றது. தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஜப்பானின் உளவு செயற்கைக்கோள்கள் திடீரென செயலிழந்தால், தற்காலிக சிறிய ரக உளவு செயற்கைக்கொளினை விரைவாக ஏவி இழப்பை ஈடுகட்ட முடியுமா என என்பதே அந்த சோதனை முயற்சி. ஆனால் அதன் தொடக்கமே இழப்பில் விழுந்திருக்கிறது.
ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட 51 நிமிடங்களில் புவியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதை இலக்காக கைரோஸ் கொண்டிருந்தது. ஆனால் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியிருப்பது, ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட பணிகளையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
முன்னதாக ஜப்பான் தனது பெருமைக்குரிய ஹெச்3 ராக்கெட்டை, தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஏவியபோது வெடித்துச் சிதறியது. அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9-க்கு போட்டியாக வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட், பல வருடங்கள் தாமதம் மற்றும் 2 தோல்வி முயற்சிகளுக்குப் பின்னர் விண்ணில் ஏவப்பட்டது. அதுவும் தற்போதைய கைரோஸ் ராக்கெட் போலவே வெடித்துச் சிதறியது.
ஜப்பானின் அரசு மற்றும் தனியார் என விண்வெளித்துறையின் முயற்சிகள் பலவும் தோல்விகரமாகி இருப்பது, அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மற்றும் வளர்ச்சியை பல ஆண்டுகளுக்கு தேக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதையும் வாசிக்கலாமே...
மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி... ஓபிஎஸ் உறுதியால் சின்னம் முடங்குமா?
பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்... 45 நாட்களுக்கு கோடை விடுமுறை!
சிஎஸ்கே அணிக்கு 'தல' தோனிக்குப் பிறகு யாரு கேப்டன்?... செயல் அதிகாரி கொடுத்த ட்விஸ்ட்!
விடிய, விடிய பேச்சுவார்த்தை... பாஜக அணியில் டி.டி.வி. தினகரனுக்கு 4, ஓபிஎஸ்சுக்கு 2 தொகுதிகள்!