பணப்பலன்கள் கிடைக்காததால் ஓய்வு காலத்திலும் நிம்மதி இல்லை: முன்னாள் வனத்துறை ஊழியர்கள் அவதி

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான, அரசின் பிற சலுகைகள் பெற தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக வனத்துறையினர் சிலர் கூறியதாவது: அரசின் பிற துறைகளைப்போல் அதிகம்பேர் பணியாற்றும் துறை வனத்துறை இல்லை. தமிழ்நாடு முழுவதுமே 6 ஆயிரம் பேர் தான் பணியாற்றி வருகின்றனர். பணியாற்றும் பரப்பு, மற்ற அரசு ஊழியர்களுடன் ஒப்பிட முடியாத ஒன்று.

பணிக் காலத்தில் மனித - வன விலங்கு மோதல் அதிகரித்துள்ள நிலையில், உயிருக்கும் உத்தரவாதமற்ற சூழலில் வனத்துறையில் பலர் பணியாற்றி வருகின்றனர். ஓய்வு காலத்துக்கு பின்னர் வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்கு செல்ல அவர்களுக்கு தேவையான பணப் பலன்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால், குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர், என்றனர்.

திருப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற வனத்துறையினர் சிலர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அமராவதி, கொழுமம், வந்தரவு, காங்கயம் ஆகிய 6 வனச் சரகங்கள் உள்ளன. இதில் சுமார் 130 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். வனக்காவலர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வனவர்கள் என பல்வேறு நிலையில் சிலர் ஓய்வு பெற்றுள்ளனர்.

இதுவரை அவர்களுக்கு உரிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை. ஈட்டிய விடுப்பு 240 நாள், ஈட்டா விடுப்பு 3 மாதங்கள், சிறப்பு முன் வைப்பு நிதி, கருணைத்தொகை உள்ளிட்டவை கிடைக்கவில்லை. பணிக் காலத்தில் ஓய்வுபெறும் 6 மாதங்களுக்கு முன்பே, வங்கிக் கணக்கு, குடும்ப புகைப்படம் உள்ளிட்ட இதர ஆவணங்கள் அனைத்தும் வனத்துறையில் சரிபார்க்கப்படுகின்றன.

ஓய்வு பெற்று ஓராண்டுக்கு மேலாகியும், பணப்பலன்களை வழங்காமல் தொடர்ந்து அலைக்கழிக்கின்றனர். மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளாததால், ஒவ்வோர் ஆண்டும் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

திருப்பூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் பலர், தற்காலிக ஊழியர்கள் என்பதால், அவர்களும் இதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை.

களப்பணியாளர்களின் கோரிக்கைகளை, அலுவலக பணியாளர்கள் கண்டுகொள்வதில்லை. அதேபோல் பணியில் இருப்பவர்களே, வேறு மாவட்டங்களுக்கு சென்றால், அவர்களுக்கு பணியிட சம்பள சான்று வழங்கவும் தாமதிக்கின்றனர்.

அவர்கள் மாத ஊதியத்தை முறையாக பெற முடியாத சூழல் நிலவுகிறது. திருப்பூர் மாவட்ட வன அலுவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கூடுதல் கவனம் செலுத்தி, ஓய்வு பெற்ற வனத்துறையினரின் எஞ்சிய வாழ்க்கையை அலைக்கழிக்காமல் வாழ வைக்க வேண்டும். அதேபோல் வனத்துறையினரின் நியாயமான கோரிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் உண்டு, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE