25+ கிராமங்களில் புகுந்த உப்புநீர் - புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்படுமா?

By க. ரமேஷ்

கடலூர்: சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் வெள்ளாறு 193 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இறுதியில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடலில் கலக்கிறது. புவனகிரி பகுதியில் இந்த ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள கிராமங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த ஆறு உள்ளது. புவனகிரி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் வட்டப் பகுதிகளில் சுமார் 100 கிராமங்கள் இந்த ஆற்று நீரால் பயனடைந்து வருகின்றன.

இந்நிலையில் பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் வெள்ளாற்றின் வழியாக கடல் நீர் ஆற்றுக்குள் பல கிலோமீட்டர் தூரம் உள்ளே புகுந்துள்ளது. இதனால் ஆற்றின் கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறி வருகிறது.

புவனகிரி வட்டப் பகுதியில் அரியகோஷ்டி, அகரம், பு.முட்லூர், தீத்தாம்பாளையம், பு.ஆதிவராகநல்லூர், தம்பிக்கு நல்லான்பட்டினம், கீழ்புவனகிரி, மேல்புவனகிரி, பெருமாத்தூர், அழிச்சிகுடி, நாலாந்தெத்து, மஞ்சக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் வெள்ளாற்றின் மற்றொரு கரையில் உள்ள சிதம்பரம் வட்டப் பகுதி கிராமங்களான சி.முட்லூர், மேலமூங்கிலடி, கீரப்பாளையம், சாக்காங்குடி, ஆயிப்பேட்டை, ஒரத்தூர், வடஹரி ராஜபுரம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து உப்பாக மாறியுள்ளது.

இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் ஆற்று நீரில் உப்பு நீரின் அளவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மட்டுமல்லாது கால்நடைகள் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடல் நீர் உட்புகுவதை தடுக்க வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதற்காக இப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தின. இந்நிலையில் நீர்வளத்துறையால் புவனகிரி அருகே உள்ள பு.ஆதிவராகநல்லூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்டுவதற்கு ரூ.90.74 கோடி மதிப்பில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தடுப்புச்சுவர் கட்டும் இடத்தின் பட்டா நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்பதால் திட்ட மதிப்பீட்டின் செலவு அதிகமானதால் திருத்தி அமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடாக ரூ.92.58 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் இத்திட்டம் நிறைவேற்றப்பட வில்லை. இதற்காக மீண்டும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களையும் அரசுக்கு அனுப்பினர்.

இதன் காரணமாக கடந்த 2023-24 நிதி ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பீடாக ரூ.112.30 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.

50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெள்ளாற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும். அதற்கான அனுமதியையும் அளித்து, நிதி ஒதுக்கீடையும் செய்து பணிகளை தொடங்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE