பெரும் அவலம்! இறந்துபோன விவசாயி... 9 கிமீ தூரம் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற மலைகிராம மக்கள்

By காமதேனு

இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு டோலி கட்டி தூக்கிச் சென்றுள்ள சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

உடலை தூக்கி வரும் உறவினர்கள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள வெள்ள கெவி ஊராட்சியில் பெரியூர், சின்னூர் என்ற மலைக் கிராமம் உள்ளன. இங்கு 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60) என்ற விவசாயி நேற்று தனது தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவருடைய உறவினர்கள் அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளனர். அப்போது அவரது தோட்டத்தில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். காட்டு மாடு முட்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரிக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரக அதிகாரி டேவிட்ராஜ் பலியானவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

இதையடுத்து விவசாயி உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக பெரியூர் மலைக் கிராமத்திலிருந்து ஒத்தையடி பாதை வழியாக 9 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி, 4 மணி நேரமாக நடந்தே உப்புக்காடு பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அங்குக் காத்திருந்த ஆம்புலன்சில் ஏற்றி பெரியகுளம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாகப் பேசிய மலைக் கிராம மக்கள், எங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. குறிப்பாகச் சாலை வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் நிலைமை அப்படியே தான் இருக்கிறது. உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ அல்லது இறந்து போனாலோ இப்படித்தான் உடலை டோலி கட்டி சுமந்து வருகிறோம். சாலை வசதி இல்லாததால் இதுபோல் பல உயிர்களை நாங்கள் இழந்து விட்டோம்" என வேதனை தெரிவித்தனர்.

மலைக் கிராம மக்களின் நிலையைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைத்துத் தர வேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE