அதிக மைலேஜ், எரிபொருள் விலை குறைவு - ‘சிஎன்ஜி’ வாகனங்களின் பயன்பாடு உயர்வு @ கோவை

By டி.ஜி.ரகுபதி

கோவை: அதிக மைலேஜ், எரிபொருள் விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் கோவையில் சி.என்.ஜி. வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுபடுதலை குறைக்கவும் பெட்ரோல், டீசல் இல்லாமல் மாற்று எரிபொருள் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. இதையடுத்து, மின்சார வாகனங்கள், இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, ‘கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்’ (சிஎன்ஜி) எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு கோவையில் அதிகரித்துள்ளது. இந்த எரிவாயு வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் திரவ வடிவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.

கேரளாவின் கொச்சியிலிருந்து வாயு வடிவில் குழாய் மூலமாக, கோவை மாவட்டத்தின் மதுக்கரையிலுள்ள பிச்சனூர் பிளாண்ட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிஎன்ஜி பங்க்-களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், கோவையில் சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கோவை - திருச்சி சாலையில் உள்ள கார் விற்பனையகத்தின் பயிற்சி மற்றும் வளர்ச்சி மேலாளர் பிரசாந்த் முருகேசன் கூறியதாவது: கோவையில் சமீப காலமாக சிஎன்ஜி வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் மைலேஜை விட சிஎன்ஜி எரிவாயு மூலம் அதிக மைலேஜ் கிடைக்கிறது.

மேலும் அதிக திறன், எரிவாயுவிலை குறைவு, எரிவாயு கிடைக்கும் பங்க்-களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்டவை இவ்வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். அதிக மைலேஜ் தரக்கூடியவகையில் இதன் உள் கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

காருக்கு பெட்ரோலில் 24 கிலோ மீட்டர் கிடைத்தால், சிஎன்ஜி எரிவாயுவில் 30 கிலோ மீட்டர் வரை கிடைக்கிறது. 2021 காலகட்டத்தில், கோவையில் ஒரு மாதத்துக்கு 10 சிஎன்ஜி கார்கள் விற்கப்பட்டன. தற்போது மாதத்துக்கு 40 சிஎன்ஜி கார்கள் விற்பனையாகின்றன.

இதனால் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் வகையில் கார்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளன. சிஎன்ஜி எரிவாயு பாதுகாப்பானதாகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாததாகவும் உள்ளது.

கோவையில் முன்பு இருந்ததை விட தற்போது 15 சதவீதம் சிஎன்ஜி எரிவாயு வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கோவையில் ஏறத்தாழ 5 ஆயிரம் கார்கள் சிஎன்ஜி எரிவாயுவில் இயங்குகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கோவை சிட்டி கேட்ஸ்டேஷன் மேற் பார்வையாளர்வீரமணி கூறும் போது,‘‘எல்.பி.ஜிபோல தான் சி.என்.ஜி. ஆனால், இதில் திறன், மைலேஜ் அதிகம். கடந்த 2022-ம் ஆண்டில் கோவையில் 7 இடங்களில் மட்டுமே சிஎன்ஜி பங்க்-கள் இருந்தன.

ஆனால், தற்போது 35 இடங்களில் சிஎன்ஜி பங்க்-கள் உள்ளன. 2022-ம் ஆண்டுகாலத்தில் இங்குள்ள பிளாண்ட்டில் இருந்து பங்க்-களுக்கு தினமும் 5 ஆயிரம் கிலோ எரிவாயு விநியோகிக்கப்பட்டது. தற்போது தினமும்23 டன் விநியோகிக்கப்படுகிறது.

அடுத்தாண்டு இதன் அளவு 50 டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன்காரணமாக எரிவாயுவின் தேவையும் அதிகரித்துள்ளது. காரில் பெட்ரோல் இருந்தாலும், சிஎன்ஜி வாயுவையும் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றார்.

பெட்ரோல் பங்க் விற்பனையாளர்கள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு பங்க்-களிலும் நாள் ஒன்றுக்கு இரண்டரை டன் வரை சிஎன்ஜி வாயு விற்பனையாகிறது. இதன் விலை கிலோ ரூ.78.50 ஆக உள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE