விபத்தை தடுக்கும் தொழில்நுட்பம் - டாடா நிறுவனம் கொடுத்த ரூ50 கோடியை ஏற்க மறுத்த ஆச்சரிய இளைஞர்!

By காமதேனு

இந்தியாவில் வாகன விபத்தால் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க அரசும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில்தான் விபத்துகளை தவிர்க்கும் புதிய மென்பொருளை ஒரு இளைஞர் உருவாக்கியுள்ளார்.

மது போதையில் வாகனத்தை ஓட்டுவதும், சாலை விதிகளை மதிக்காமல் பயணிப்பதும் மற்றும் செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களினாலேயே நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கைத் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில்தான் 23 வயதான மோஹித் யாதவ் என்பவர் விபத்துகளை தவிர்க்கக் கூடிய ஓர் மென்பொருளை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தன்னுடைய சிறு வயதில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவரின் கண் எதிரிலேயே கார் மற்றும் டிரக் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு மிகப் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கின்றது. இந்த விபத்து சம்பவம்தான் மோஹித் யாதவை, விபத்துகளை தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் முன்னோக்கி நகர்த்தி இருக்கிறது.

இந்த செயலி விபத்தை தவிர்ப்பது மட்டுமின்றி எரிபொருள் சிக்கனத்திற்கும் வழிவகுக்குமாம். அந்தவகையில், சுமார் 50 சதவீதம் வரை எரிபொருளை சிக்கனப்படுத்த மோஹித் உருவாக்கிய செயலி உதவும் என கூறப்படுகின்றது. இந்த செயலியையே மோஹித்திடம் இருந்து வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன் வந்திருக்கின்றது. இதற்காக சுமார் 50 கோடி ரூபாய் வரை அவருக்கு வழங்க டாடா மோட்டார்ஸ் தயாராக உள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர் அந்த பணத்தை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், இந்த மென்பொருளை அரசாங்கத்திடம் வழங்கப் போவதாகவும் மோஹித் கூறி இருக்கின்றார்.

ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சேர்ந்த மோஹித் யாதவ், சண்டிகர் பல்கலைகழகத்தில் பிடெக் பட்டம் முடித்திருக்கின்றார். இந்தப் படிப்பின் இறுதியாண்டின் போதே, விபத்தை தவிர்க்கும் மற்றும் மைலேஜை அதிகரிக்கும் இந்த மென்பொருளை அவர் உருவாக்கி இருக்கின்றார். இந்த மென்பொருள் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதையும் தவிர்க்க உதவும். இந்த சாஃப்ட்வேர் பொருத்தப்பட்ட வாகனம் ஓட்டுநர் குடித்திருந்தால் வாகனம் ஸ்டார்ட் ஆகாது.இத்தகைய சூப்பரான மென்பொருளையே மோஹித் யாதவ் உருவாக்கி இருக்கின்றார். இந்த மென்பொருள் டீசல் மற்றும் பெட்ரோல் என இரு வாகனங்களின் மைலேஜ் திறனையும் அதிகரிக்கச் செய்யும்.

இது பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் இந்தியர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, இந்த தொழில்நுட்பம் விரைவில் வாகனங்களில் பயன்பாட்டிற்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE