மூணாறில் முன்கூட்டியே முடிந்த கோடை சீசன்: தொடர் மழையால் படகு சவாரிகள் நிறுத்தம்

By என்.கணேஷ்ராஜ்

மூணாறு: தொடர் மழையால் மூணாறில் இந்த ஆண்டுக்கான கோடை சீசன் முன்னதாகவே முடிவுக்கு வந்துள்ளது. இதனால் சுற்றுலா சார்ந்த தொழில்கள் பாதிப்படைந்துள்ளன.

தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பலரும் மூணாறுக்கு சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டினர். ஆகவே அங்கு சுற்றுலா சார்ந்த தொழில்கள் மும்முரமாகின. இதனைத் தொடர்ந்து கேரள அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் குழு சுற்றுலாவை தொடங்கின. அதன்படி, பார்க்க விரும்பும் சுற்றுலா பகுதிகளின் எண்ணிக்கை, தூரத்தின் அடிப்படையில் ஒருவருக்கு ரூ.350 முதல் ரூ.400 என்று கட்டணம் (பேக்கேஜ்) நிர்ணயிக்கப்பட்டன.

ஒரு பேருந்தில் 50 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் பேருந்தில் ரயில் படுக்கை போன்று மாற்றம் செய்து ரூ.200 கட்டணத்தில் இரவு தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் காற்றழுத் தாழ்வு மண்டலத்தால் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. மேலும் வழக்கத்துக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை காலமும் தொடங்கி விட்டது.

இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கனமழைக்கு ஏற்ப இடுக்கி மாவட்டத்துக்கு அவ்வப்போது ஆரஞ்சு, ரெட் அலர்ட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கனமழை காரணமாக தற்போது மாட்டுப்பட்டி, குண்டலை, எக்கோ பாயி்ண்ட் உள்ளிட்ட அணைகளில் படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரவு பயணத்தை தவிர்க்கவும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இது போன்ற காரணங்களால் மூணாறுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாய் குறைந்துள்ளது. இதனால் வழக்கத்தை விட முன்னதாகவே கோடை சீசன் முடிவடைந்துள்ளது.

இது குறித்து சிறு வியாபாரி சந்துரு கூறுகையில், இந்த ஆண்டு தமிழகம், கேரளாவில் நடைபெற்ற பிரச்சாரம், தேர்தல் மற்றும் பள்ளித் தேர்வுகள் போன்றவற்றினால் ஆரம்பத்தில் இருந்தே சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. இந்நிலையில் மழையினால் சீசனும் முன்னதாகவே முடிந்துள்ளது. இதனால் சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE