தமிழக - கர்நாடக எல்லையில் கனமழை: வறண்டு கிடந்த பாலாற்றில் வெள்ளப் பெருக்கு!  

By த.சக்திவேல்

மேட்டூர்: தமிழக - கர்நாடக எல்லையில் பெய்த கனமழையின் காரணமாக, பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் செந்நீராக பெருக்கெடுத்து ஓடியது.

தமிழக - கர்நாடக எல்லையில் காவிரியின் துணை நதியான பாலாறு அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யும்போது, பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் அடிப்பாலாறு என்ற இடத்தில் கலந்து வருவது வழக்கமாகும்.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியான, தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர், அந்தியூர் வனப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் மழைப்பொழிவு குறைந்ததால் பாலாற்றில் கசிவு நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், நீர்வரத்து முற்றிலுமாக நின்றதால் பாலாறு தண்ணீர் இன்றி வறண்டு மணல் திட்டுகளாக காட்சியளித்தது.

மேலும், கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, சில்லென்ற நீரோடையாக இருந்த பாலாறு, தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதன் காரணமாக, வனப்பகுதியில் இருந்து யானைகள், மான்கள் தண்ணீர் தேடி பாலாறு பகுதியில் முகாமிட்டது. இதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, ஈரோடு மாவட்டம் தட்டக்கரை, பர்கூர், மணியாச்சி, அந்தியூர் வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக பரவலாக மிதமான மற்றும் கன மழை பெய்தது.

இதனால், பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, செந்நீராக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலை, மைசுர் செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாலாறு பாலத்தில் நின்று, செந்நீராக ஓடும் தண்ணீரை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணைக்கு கடந்த 20ம் தேதி விநாடிக்கு 390 கன அடியாக இருந்த நீர்வரத்து, 21ம் தேதி 401 கன அடியாகவும், நேற்று (22ம் தேதி) 217 கன அடியாக சரிந்து காணப்பட்ட நிலையில் இன்று காலை 633 அதிகரித்தது. மாலை 4 மணிக்கு விநாடிக்கு 1,012 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 48.47 அடியாகவும், நீர் இருப்பு 16.86 டிஎம்சியாகவும் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE