வாகனங்களில் விதிமீறி பொருத்தப்படும் விளக்குகளால் விபத்து அபாயம் @ கோவை

By இல.ராஜகோபால்

கோவை: சாலைகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் மோட்டார் வாகன சட்டத்தில் பல விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் கோவை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் தொடங்கி கார், ஜீப், சரக்கு வாகனம், சுற்றுலா வாகனங்கள், லாரி, பேருந்துகள் என அனைத்திலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் மற்றும் மிக அதிக வெளிச்சம் தரும் வகையிலான விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சாலையின் எதிர்திசையில் வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

தவிர சாலையோரத்தில் நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் இத்தகைய விதிமீறல் செயல்களால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் வாகனங்களை இயக்க பலர் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. மேலும், நெடுஞ்சாலைகளில் இத்தகைய விதிமீறல்களால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

சுற்றுலா வாகனங்களில் முன்பும், பின்பும் என அனைத்து இடங்களிலும் பல வகையான விளக்குகள் பொருத்துகின்றனர். இதனால் எதிர்திசையில் வரும் வாகன ஓட்டிக்கு தனக்கு எதிரே வருவது என்ன வகையான வாகனம் என்பது கூட தெரியாத அளவுக்கு உள்ளது.

மோட்டார் வாகன சட்ட விதிமீறி வாகனத்துடன்
வந்த விளக்கை மாற்றி அதிக வெளிச்சம்
தரக்கூடிய ஹாலோஜென் விளக்குகள்
பொருத்தப்பட்டுள்ள கார்.

ஒரு சிலர் இதனை பெருமையாக கருதி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து பேஸ்புக், யுடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விதிமீறி செயல்படுவோர் மீது போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விதிகளை மதித்து நடக்கும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

இதுகுறித்து சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை அமைப்பின் தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறும் போது, ‘‘தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான வாகனங்களில் வெள்ளை நிற ஹாலோஜென் விளக்குகள் தான் பொருத்தப்படுகின்றன. இருப்பினும் அவற்றை மாற்றி அதிக வெளிச்சம் தரும் விளக்குகளை பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஹை பீம் பயன்படுத்தாமல் எதிர்திசையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இது தவிர பல விதமான அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை வாகனங்களில் பலர் பொருத்தியுள்ளனர். இதனால் விபத்து அபாயம், ஒலி மாசு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடவடிக்கை நிச்சயம்: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும்போது, ‘‘மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகளை மீறி கோவை மாவட்டத்தில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹாரன்கள் மற்றும் விளக்குகள் மீது வட்டார போக்குவரத்துத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்,’’என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE