‘ரூ20 ஆயிரம் ஓய்வூதியத்துடன் எப்படி வாழ முடியும்?’ மாவட்ட நீதிபதிகளுக்காக உச்ச நீதிமன்றம் விசனம்

By காமதேனு

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள், ஓய்வூதியமாக ரூ20 ஆயிரம் மட்டுமே பெறுவது குறித்தும், அதனை வைத்துக்கொண்டு அவர்கள் வாழ்வது எப்படி என்றும் உச்ச நீதிமன்றம் கவலையுடன் கேள்வி எழுப்பி உள்ளது.

ஓய்வூதியம் என்பது தனது வாழ்நாளை பணயம் வைத்து ஓடாய் தேய்ந்த ஊழியரின் சேவை, விசுவாசம், அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு நிறுவனம் வழங்கும் பதில் மரியாதையாகும். ஓய்வு காலத்தில் ஒருவருடைய கண்ணியமான வாழ்வினை ஓய்வூதியம் உறுதி செய்கிறது. ஆனால், உழைக்கும் காலத்திலேயே மதிப்பான ஊதியம் கிட்டாத அவலம் அதிகரித்து வரும் சூழலில் போதிய ஓய்வூதியம் என்பது சவாலாகவே நீடிக்கிறது. நீதித்துறையின் மாண்பமை நீதிபதிகளும் இதில் விதிவிலக்கல்ல என்ற அவலம் உச்ச நீதிமன்ற விசாரணை ஒன்றில் வெளிப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

இந்த வகையில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளின் ஓய்வூதியத் தொகை குறித்து உச்ச நீதிமன்றம் கவலை எழுப்பியுள்ளது. "ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ரூ20,000 மட்டுமே ஓய்வூதியம் பெறுகிறார்கள். வாழ்நாள் சேவைக்குப் பிறகு இதனை வைத்துக்கொண்டு அவர்களால் எப்படி வாழ முடியும்?" என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஓய்வூதிய பிரச்சினை தொடர்பாக அகில இந்திய நீதிபதிகள் சங்கத்தின் மனுவை விசாரித்தபோது, மத்திய அரசை நோக்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இவ்வாறு கேள்வி எழுப்பியது.

"இதற்கு சரியான தீர்வை நாங்கள் விரும்புகிறோம். மாவட்ட நீதிபதிகளின் துயர் துடைக்கப்பட வேண்டும்" என்று உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தலைமை வகித்த தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, இந்த விவகாரம் குறித்து அரசு விரைந்து பரிசீலிக்கும் என உறுதியளித்தார். முன்னதாக, இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி நீதிபதிகளின் ஊதியம் மற்றும் பணிச்சூழல் குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

நீதிமன்ற விசாரணை

”ஒரு நீதிபதி பணியில் இருக்கும்போது, அவருக்கான கண்ணியமான இருப்பை உறுதி செய்ய வேண்டும். பணி ஓய்வுக்கு பின்னரும் அவருக்கான கண்ணியம் மற்றும் சுதந்திரம் பேணப்பட வேண்டும். திறமைகளை ஈர்க்கும் வகையில், ஒரு சாத்தியமான தொழில் வாய்ப்பாக நீதித்துறை இருக்க வேண்டும். பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற நீதித்துறையினரின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் உறுதி செய்யப்பட வேண்டும்” என நீதிபதிகள் சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உருக்கமாக தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


பிரதமர் மோடி வருகை... தமிழக காங்கிரஸ் தலைவருக்கு வீட்டுக் காவல்!

கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த ஏ.ஆர்.ரஹ்மான்... சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு!

திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி...செல்வப்பெருந்தகை டெல்லி பயணம்!

தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட்நியூஸ்... தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு!

தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் கொலையில் திடீர் திருப்பம்...பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்குத் தொடர்பு!

VIEW COMMENTS