கோவில்பட்டி: பயிர் காப்பீடு திட்டத்தில் டிஜிட்டல் பயிர் அளவீடு முறையை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி உள்ளதால், இனிமேல் போலியாக யாரும் பயிர் காப்பீடுத் தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய நிலங்களில் தீர்வை செலுத்துவது, அளவீடு செய்வது, கிரையம் செய்த நிலங்களை பட்டா மாற்றுவது, உட்பிரிவு செய்யப்பட்ட நிலங்களை தனிப்பட்டாவாக்கி நிலத்தை பிரிப்பது போன்ற பல்வேறு பணிகள் வருவாய்த்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் காரிப் மற்றும் ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களை வருவாய்த்துறை பயிர் அடங்கல் கணக்கில் ஏற்றி, அந்தந்த ஆண்டு முடிவடையும் போது வருவாய் தீர்ப்பாய அலுவலரால் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு முதல் விவசாயிகள் பயிரிடும் பயிர்கள் மழை அல்லது வறட்சியால் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு உதவும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
» டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
» சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், அரசு அறிவிக்கும் காலக்கெடுவுக்குள் விதைப்பு செய்துள்ள பயிர் விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் இதை கணக்கெடுத்து, அடங்கல் புத்தகத்தில் பதிவு செய்து, பயிர் அடங்கல் வழங்குவார்கள். இதனடிப்படையில் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. சிலர் பயிரிடப்படாத நிலங்களுக்குச் பயிர் செய்ததாக அடங்கல் பெற்று பயிர் காப்பீடு செய்து, அதற்குரிய இழப்பீடு பெறுகின்றனர். இதனால் உண்மையிலேயே நிலங்களில் விதைப்பு செய்து, தண்ணீர் பாய்ச்சி, வெயில், மழை பாராமல் நாள் முழுவதும் பணியும் செய்யும் விவசாயிகள் பாதிப்பை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், போலியாக பயிர் காப்பீடு பெறுவதை தடுக்கும் வண்ணம் தற்போது மத்திய, மாநில அரசுகள் டிஜிட்டல் பயிர் அளவீடு (எர்த் ஆப்) முறையை அமல்படுத்தி உள்ளது. இதன்படி, பயிர் அடங்கல் வழங்குவதற்கு முன்பு அந்த புல எண்ணில் இருந்து புகைப்படம் எடுத்து, அதனை கிராம நிர்வாக அலுவலர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பயிர் காப்பீடு வழங்கும்போது, அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் பதிவேற்றிய படத்தையும், பயிர் காப்பீடு நிலத்தையும் ஒப்பிட்டு பார்த்து இழப்பீடு வழங்குவார்கள். இதனால் போலியாக யாரும் பயிர் அடங்கல் பெற்று காப்பீட்டுத் தொகை பெற முடியாது நிலை உருவாகி உள்ளது. இதனை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: கிராம நிர்வாக அலுவலர்களின் பணிச்சுமை காரணமாக அனைத்து புல எண்களுக்கும் சென்று பார்வையிட்டு பயிர் அடங்கல் வழங்க முடியாது. அதனால் அவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்தோ அல்லது தூரமான இடத்தில் இருந்து பார்த்தோ விவசாயிகள் கூறும் தகவலை கொண்டு பயிர் அடங்கல் வழங்கி விடுகின்றனர். இதனால் கடந்த காலங்களில் சிலர் பயிரிடப்படாத நிலங்களிலும் பயிரிட்டதாக அடங்கல் பெற்று பயிர் காப்பீடு செய்து வந்தனர். இத்தகைய நிலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டிய சூழல் அரசுக்கு ஏற்பட்டது.
இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க இந்தாண்டு முதல் டிஜிட்டல் பயிர் அளவீடு மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒவ்வொரு புல எண்ணிலும் தரிசு மற்றும் பயிரிடப்பட்ட நிலங்களை துல்லியமாக கணக்கெடுப்பு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 100 புல எண்கள் வரை நேரில் சென்று புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்து, அடங்கல் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி: அதனடிப்படையில் பயிர் விவரங்களை எர்த் ஆப் மூலம் அதிகாரிகள் ஒப்பீடு செய்வார்கள். அப்பாது கிராம நிர்வாக அலுவலர் பதிவேற்றம் செய்த தகவலும், எர்த் ஆப் மூலம் அதிகாரிகளுக்கு கிடைக்கும் தகவலும் ஒன்று போல் இருந்தால் மட்டுமே இழப்பீடு பெற முடியும். இதன் மூலம் இனிமேல் யாரும் தவறாகவோ, உண்மையை மறைத்தோ பயிர் சாகுபடி விவரங்களை தெரிவித்து அடங்கல் பெற முடியாது என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம்,” என்றார்.