நெல்லை - திருச்செந்தூர் - குமரி நெடுஞ்சாலையில் பரிதாப நிலையில் பழமையான கல் மண்டபங்கள்!

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி - திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி- கன்னியாகுமரி நெடுஞ்சாலைகளில் பல நூற்றாண்டுகள் பழமையான கல் மண்டபங்கள் பராமரிப்பின்றி பரிதாப நிலையில் காணப்படுகின்றன.

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இந்த கல் மண்டபங்கள் தகர்க்கப்படும் அபாயம் நிலவுகிறது. பாண்டிய மற்றும் நாயக்கர் மன்னர்களால் பல்வேறு இடங்களில் கல் மண்டபங்கள் பல்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மதுரை -தென்காசி சாலை, திருநெல்வேலி- திருவனந்தபுரம் சாலை , திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலை ஆகிய சாலையோரங்களில் காணப்படும் கல்மண்டபங்கள் பரிதாப நிலையில் காட்சியளிக்கின்றன.

கிருஷ்ணதேவராயர் காலத்தில் அதிகமாக கல் மண்டபங்கள் கட்டப்பட்டதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் 17-ம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்பகுதியை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னர் மற்றும் ராணி மங்கம்மாள் ஆகியோர் தங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் இந்த கல் மண்டபங்களை மிகவும் கலை நயத்துடன் வடிவமைத்து கட்டியிருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காவல் கிணறு பகுதியில் புதர்கள் மண்டி அடையாளம் தெரியாத
நிலையிலுள்ள கல் மண்டபம்.

தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் இந்த கல் மண்டபங்களில் அழகுற சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன. மண்டபங்களில் உள்ள கல் தூண்களில் பல்வேறு காலகட்டத்தில் பிரதிபலிக்கக் கூடிய சம்பவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நேர்த்தியாக கற்களால் மட்டுமே கட்டப்பட்டுள்ள இந்த கல் மண்டபங்களில் ஒவ்வொரு கல்லையும் இணைத்துள்ள நுட்பம் மிகவும் நுண்ணியமானது. சரியான காற்று புகுவும், வெளிச்சம் ஊடுருவுவதற்கும் ஏற்ற தொழில்நுட்பத்துடன் இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் 500 ஆண்டுகளுக்குமேல் பழமையான இந்த கல்மண்டபங்கள் இயற்கை சீற்றங்களால் அழிவுறாமல் இருக்கும் நிலையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இடித்து அகற்றுவது வேதனையாக இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். பாரம்பரியமான கல் மண்டபங்களை பாதுகாத்து,தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE