கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டாய வசூலால் பயனாளிகள் அதிருப்தி!

By ந.முருகவேல்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு பயனடையும் பயனாளிகளிடம், கட்டுமானப் பணியை ஆய்வு செய்யும் மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் ஆளும் கட்சி பிரமுகர்களின் கட்டாய வசூலால் பயனாளிகள் கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை, ‘குடிசைகள் இல்லாத வீடுகளாக மாற்ற வேண்டும்’ என்ற நோக்கத்தில், குடிசையில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தர ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு தலா ரூ.3.5 லட்சம் என்ற அளவுக்கு நிதி அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீடுகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீடும் சமையலறையுடன் 360 சதுர அடி பரப்பளவில் அமைய வேண்டும். இதில் 300 சதுர அடி கான்கிரீட்டிலும், 60 சதுர அடி தீ பற்றாத பொருட்களினாலான கூரையாகவும் இருக்க வேண்டும்.

வீடு பெற விரும்பும் பயனாளிகள், பத்திரத்தின் நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பட்டா மற்றும் சிட்டா ஆவணம், செல்போன் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்கு விபரம், வருமானச் சான்றிதழ், இடத்தின் முழு முகவரி உள்ளிட்ட சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறாக அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறையின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி உதவி பொறியாளர்கள், வட்டார பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழுக்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,500 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒன்றியம் வாரியாக பயனாளிகள் பணி ஆணைகளை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு பணி ஆணை வழங்கும் போது அதில் கலந்து கொள்ளும் எம்எல்ஏ-க்கள், “அரசே பயனாளிகளுக்கு நேரிடையாக வழங்கும் நல்லத் திட்டம் இது. உங்களது பங்களிப்போடு அரசு தரும் நிதியைக் கொண்டு வீட்டை கட்டிக் கொள்ள வேண்டும். இதற்காக யார் எது கேட்டாலும் எதுவும் வழங்க வேண்டாம். ” என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால் நடைமுறையில் வேறாக உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் 394 பயனாளிகளுக்கும் மற்றும் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 392 பயனாளிகளுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணி ஆணைகளைப் பெற்றுள்ளனர்.

இவ்வாறு பெற்றவர்களிடம் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சி உதவிப் பொறியாளர்கள் அளவீடு செய்யும் போது கட்டாய வசூலில் ஈடுபடுவதாகவும், அதைத் தாண்டி ஆளும் கட்சியின் ஒன்றிய பொறுப்பில் உள்ளவர்களும் கட்டாய வசூலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள பயனாளிகள், “எதுவும் வழங்க வேண்டாம் என்று கூறினார்கள், ஆனால் தற்போது வசூலுக்கு வருகின்றனரே!” என்று ஆதங்கப்படுகின்றனர்.

இத்திட்டத்தை செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இதுகுறித்து கேட்டபோது, “பயனாளிக்கு நேரடியாக பணி ஆணை வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றிய செயலாளர்களும் பயனாளிகளின் பட்டியலை இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். திட்டத்தை கண்காணிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் இதற்கு உடந்தையாக உள்ளனர்” என்கின்றனர்.

திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகனிடம் இதுபற்றி கேட்டபோது, “தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் தான் வழங்கியிருக்கிறோம். ஒன்றிய செயலாளர்கள் பயனாளிகளிடம் இருந்து ஏதேனும் வாங்கியிருக்க வாய்ப்பு உண்டு. பொறியாளர்கள் உள்ளிட்ட யார் எது கேட்டாலும் எதுவும் வழங்க வேண்டாம் என்று பயனாளிகளிடம் தெளிவாகக் கூறி வருகிறோம்” என்றார். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சங்கராபுரம் எம்எல்ஏ-வுமான உதயசூரியனிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் பேச முன்வரவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE