16 ஆண்டு ஆச்சு... கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இளையரசனேந்தல் குறுவட்டம் இணைவது எப்போது?

By KU BUREAU

கோவில்பட்டி: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இளையரசனேந்தல் குறுவட்டத்தை இணைத்து 16 ஆண்டு காலமாக நீடிக்கும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கோவில்பட்டியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இளையரசனேந்தல் கிராமம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் குருவிகுளம் ஊராட்சியில் இருந்த இளையரசனேந்தல் குறுவட்டத்துக்கு (பிர்கா) உட்பட்ட 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த 15.4.2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு, அதே ஆண்டு மே 1-ம் தேதி இளையரசனேந்தல் குறுவட்டத்தை சேர்ந்த 12 ஊராட்சிகள் இணைப்பு விழா நடந்தது. மற்ற துறைகள் அனைத்தும் கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், தொடக்க கல்வித்துறை, உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறை ஆகியவை மட்டும் இன்னும் இணைக்கப்படவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் புதிதாக உதயமான பின்னரும், இளையரசனேந்தல் குறுவட்டம் தூத்துக்குடியுடன் இணைக்கப்படாததால், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 16 ஆண்டுகளாகியும் இப்பிரச்சினையை தீர்க்க அரசு பாராமுகமாக இருப்பதால், இளையரசனேந்தல் குறுவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து நினைவூட்டல்: குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி அலகில் சேர்க்கவும், இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கவும் பரிந்துரை செய்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சார்பில் கடந்த 10.02.2020-ல் பிரேரணை சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னர் தொடர்ந்து நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டும் பயன் இல்லை.

மத்திய அரசு மாவட்டம் வாரியாக ஊராட்சி அமைப்புகளை இணைத்து செயலியை உருவாக்கி உள்ளது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் இளையரசனேந்தல் குறுவட்டம் இல்லை. மாறாக தென்காசி மாவட்ட பிரிவில் உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள், பள்ளி குழந்தைகள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள், உதவித்தொகை ஆகியவற்றை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனை பெற முடியாமல் ஏராளமானோர் தவிக்கின்றனர்.

தீர்வு கிடைக்கவில்லை: இதுகுறித்து கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர்குளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அ.ஜெயபிரகாஷ் நாராயணசாமி கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. அப்போது வருவாய் மாவட்டத்துக்குள் தான் ஊராட்சி அமைப்புகள் இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி திமுக வழக்கு தொடர்ந்து, புதிததாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை வாங்கியது.

இளையரசனேந்தல் குறுவட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதன் பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்துடன் இளையரசனேந்தல் குறுவட்டத்துக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், தேர்வு செய்யப்பட்ட 12 ஊராட்சி மன்ற தலைவர்களும், ஊராட்சிஒன்றியக்குழு உறுப்பினர்களும் இளையரசனேந்தல் குறுவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். கனிமொழி எம்.பி.யிடம் மனு வழங்கினேன். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது: சட்டப்பேரவையில் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

ஆனால், இதுவரை எந்தவித முன்னெடுப்பும் இல்லை. இந்தாண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் இளையரசனேந்தல் குறுவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஊரக அலகில் இணைத்து தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE