கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ரேஷனில் துவரம் பருப்பு, கோதுமை விநியோகத்தில் சிக்கல்

By ந.முருகவேல்

தமிழகம் முழுவதும் இயங்கிவரும் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, சர்க்கரை, கோதுமை. பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அரசின் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மார்ச், ஏப்ரல்,மே மாதங்களில் ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவியது. குறித்த நேரத்தில் இவை விநியோகம் செய்யப்படுவதில்லை என்று நுகர்வோர் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரிடம் அப்போது கேட்டபோது, “மே மாதத்துக்கு தேவையான 20 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்களுக்குரிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குழுமத்தின் ஒப்புதலின்படி துவரம் பருப்பு விநியோகிப்பாளர்கள் நால்வருக்கும் பாமாயில் விநியோகிப்பாளர்கள் மூவருக்கும் கொள்முதல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

மே மாதம் விநியோகிப்பதற்காக ரேஷன் கடைகளுக்கு 5,405 மெ.டன் துவரம் பருப்பு மற்றும் 31,19,722 பாமாயில் பாக்கெட்கள் படிப்படியாக வந்த வண்ணம் உள்ளது. ஓரிரு நாட்களில் அனைத்துக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும். இனி இந்தச் சிக்கல் இருக்காது” என்று தெரிவித்திருந்தனர்.

அவர்கள் அவ்வாறு தெரிவித்தபடியே பொருட்கள் வரப்பெற்று, சில நாட்கள் விநியோகம் சீரானது. அடுத்த இரு மாதங்களில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டு, ஆகஸ்ட் மாத இறுதியை எட்டிய நிலையிலும், துவரம் பருப்பு தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது.

குறிப்பாக பண்ருட்டியில் நிலைமை சீரானால்சிதம்பரத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது. உளுந்தூர்பேட்டையில் சரியானால் கள்ளக்குறிச்சியில் வழங்குவது நிறுத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விநியோகம் சரிவர இல்லாத சூழலில், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வெளிச்சந்தையில் கிலோ ரூ.160 என்ற அளவில் விற்ற துவரம் பருப்பு, தற்போது ரூ.180 வரை உயர்ந்துள்ளது.

இதற்கிடையே ரேஷன் கடைகளில் முன்பு போல கோதுமையும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. கேட்டால், ‘ஸ்டாக் வரவில்லை’ என்ற ஒற்றை வார்த்தையுடன் நிறுத்தி விடுகின்றனர் என்று நுகர்வோர் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரோ, தங்கள் குடோன்களில் கோதுமை மூட்டைகள் இருப்பில் உள்ளதாகவும், ‘ஸ்டாக்’ அதிகமாகி பூச்சி அரித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

துவரம் பருப்பு மற்றும் கோதுமை தட்டுப்பாடு குறித்து கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜூவிடம் கேட்டபோது, “பருப்பு கொள்முதல் செய்ய ஒப்பந்ததாரர் நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்கு மத்தியில் பருப்பு மூட்டைகள் வர வர, ஐம்பது, ஐம்பது கடைகள் என அடுத்தடுத்து அனுப்பி வைத்து நிலைமையை சரி செய்து வருகிறோம்.

ஓரிரு தினங்களில் பருப்பு விநியோக சிக்கல் தீரும். கோதுமையை பொறுத்தவரை, அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை. அரிசிக்கு மாற்றான கோதுமை நுகர்வோருக்கு மட்டுமே அது வழங்கப்படும். கோதுமை விநியோகம் தொடர்பான சிக்கலும் விரைவில் தீர்க்கப்பட்டு விடும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE