தலைவிரித்தாடும் கந்துவட்டி கொடுமை - விழுப்புரத்தில் எளிய மக்கள் பரிதவிப்பு

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் கந்துவட்டி கொடுமை எளிய மக்கள் பரிதவிப்பு விழுப்புரம் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் கந்து வட்டி கொடுமைகளால் மக்கள் பரிதவிக்கின்றனர். நீண்ட காலமாக இருந்து வரும் இந்தக் கொடுமை அண்மை காலமாக இம்மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.

ரூ.10 ஆயிரத்துக்கு ரூ.1,000 வட்டி என்ற அளவில் கொடுமையான வட்டி எளிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்கள், தங்களின் அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்வதற்காக சில சமயங்களில் முறைப் படுத்தப்படாத நபர்களிடம் கடன் வாங்குகின்றனர். இவர்கள் சட்டத்துக்கு புறம்பாக அதிக வட்டிக்கு, கேட்ட உடன் கடன் தருகின்றனர்.

உதாரணமாக ஒருவர், இதுபோன்ற நபர்களிடம் ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கினால் ஒரு மாதத்தில் திருப்பித் தர வேண்டும். இதற்கு வட்டியாக 10 சதவீதம் என அசல் தொகையில் ரூ. 1,000 எடுத்துக் கொண்டு ரூ. 9 ஆயிரம் தருகின்றனர். இப்பணத்தை கொடுக்கும்போது பிராமசரி நோட்டு தருவது அல்லது நன்கு அறிமுகமானவர் மூலம் ஜாமீன் கையெழுத்து பெறுகின்றனர்.

மிகச்சரியாக ஒரு மாதத்திற்குள் அசலும், வட்டியும் என ரூ.10 ஆயிரம் கொடுத்து பைசல் செய்ய வேண்டும். பைசல் செய்த அன்றே மீண்டும் அதே வட்டிக்கு எவ்வளவு தொகை தேவையோ, அதை மீண்டும் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். தொகை அதிகம் என்றால் சொத்து பத்திரத்தை வாங்குகிறார்கள்.

ஒரு வேளை குறிப்பிட்ட தேதியில் அசல் தொகையை கொடுக்க இயலாவிட்டால், மறுநாள் முதலில் வாங்கிய ரூ. 10 ஆயிரத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 1,000 வட்டியாக அசலுடன் சேர்க்கப்படும். அதாவது குறிப்பிட்ட தேதிக்கு பின் 10 நாட்கள் கடந்தால் அசல் ரூ.20 ஆயிரமாக கருதப்படும். இதற்கு அன்றைய தேதியில் ஒப்புக்கொண்டு, அப்போது ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியதாக (வாங்கியதது ரூ.9 ஆயிரம்தான்) எழுதி தர வேண்டும். இந்த ரூ.20 ஆயிரத்துக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வட்டி செலுத்த வேண்டும்.

‘ஸ்பீடு வட்டி’, ‘மீட்டர் வட்டி’ என்று கூறப்படும் இந்த வட்டி முறை சற்று அமுங்கி இருந்தது. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் அதிக அளவில் தலை தூக்கியிருக்கிறது.

குறிப்பாக விழுப்புரம் நகர பகுதியில், மீன், காய்கறி, பழங்களை வாங்கி விற்பனை செய்யும் எளிய வியாபாரிகள், தினக்கூலி தொழிலாளர்கள் இந்த வட்டிக் கொடுமையில் சிக்கித் தவிக்கின்றனர். திண்டிவனம் பகுதியிலும் தினக்கூலி தொழிலாளர்கள், மரக்காணம் பகுதியில் மீன்களை வாங்கி விற்கும் எளிய மீனவப் பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சமயத்தில் தொழில் நெருக்கடியில், லட்சக்கணக்கில் அசலைப் பெற்று, குறிப்பிட்டபடி இந்த கொடுமையான வட்டித் தொகையை செலுத்தாவிட்டால், கடன் பெற்ற நபர்களிடம் அவர்களது சொத்தை எழுதி வாங்க பல்வேறு நெருக்கடிகள் தரப்படுகின்றன.

இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தால் பெரும்பாலும் நடவடிக்கை இருப்பதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போல கந்துவட்டிக்கும் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வட்டிக்கு விடுவோருக்கு பின்னால், அரசியல் பிரமுகர்கள் இருக்கிறார்கள். இதனால் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டும் வலுவாக உள்ளது.

இத்தகைய அதிக வட்டி வசூலிக்கும் நபர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2003-ம் ஆண்டு ‘தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடைச் சட்டம் 2003’ என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

வட்டிக்கு பணம் பெற்றவர்கள், தாங்கள் பெற்ற தொகையை நீதிமன்றத்தின் மூலம் செலுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் ஏட்டளவில் மட்டுமே தமிழகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இந்தச் சட்டத்தால் எந்த ஒரு பயனும் இல்லை. இந்த விஷயத்தில் அவசர, அவசிய நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE