திருத்தங்கள் கோரி குவியும் மனுக்கள் - கோவை ‘மாஸ்டர் பிளான்’ இறுதி அறிக்கை தாமதம்

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மாஸ்டர் பிளான் தொடர்பாக இதுவரை 65 சதவீத பணிகளே நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 2-வது வாரத்துக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நகர ஊரமைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு நகரின் எதிர்கால வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில், ‘மாஸ்டர் பிளான்’ (நகரமைப்பு பெருந்திட்டம்) முக்கியப் பங்காற்றுகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கோவையில் கல்வி, தொழில், மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாநிலத்தின் பிற பகுதிகளைச்சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து குடியேறுகின்றனர்.

கோவையில் கடந்த1994-ம் ஆண்டிலிருந்து மாஸ்டர் பிளான் பயன்பாட்டில் உள்ளது. மாஸ்டர் பிளானை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், கோவை மாஸ்டர் பிளான் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படவில்லை. இச்சூழலில், நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கோவை மாஸ்டர் பிளான் திட்டத்தை புதுப்பிப்பது தொடர்பான நடவடிக்கையை திமுக அரசு தீவிரப்படுத்தியது.

கோவை மாவட்ட நகர ஊரமைப்புத்துறையின் சார்பில், 2041-ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில்கொண்டு, கோவை மாநகராட்சி, காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூர், மதுக்கரை ஆகிய 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 கிராம ஊராட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கி, 1531.53 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கோவை உள்ளூர் திட்டக்குழுமப் பகுதிக்கான திருத்திய எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

இதில், திருத்தங்கள் கோரி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். நிலம் வகை மாற்றம், வேளாண் நிலமாக உள்ளதை வணிக பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும், குடியிருப்பு நிலத்தை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 3,400 மனுக்கள் வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து, திருத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பின் தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறும்போது, ‘‘அடுத்த 40 வருடங்களில் நகரின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம், தொழிற்சாலை வழித்தட திட்டம், பசுமை மற்றும் நீர்நிலை கட்டமைப்புகள், பொருளாதார திட்டமிடல், உள்வட்ட சுற்றுச்சாலைகள், நகர்ப்புற வனவியல்,வளர்ச்சிக்கான நில உபயோகங்கள், திட்ட சாலைகள் ஆகியவற்றின் நில விவரங்கள் சர்வே எண்ணுடன் மாஸ்டர் பிளானில் இடம் பெறும்.

கோவை போன்ற வளர்ச்சியடைந்துவரும் நகரங்களில், மாஸ்டர் பிளான் அறிக்கையை இறுதிப்படுத்தி வெளியிடுவது தாமதமாகி வருவது வருத்தத்துக்குரியதே. சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் போன்றவை பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், கோவை நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மாஸ்டர் பிளான் இறுதி திட்ட அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும்’’ என்றார்.

நகர ஊரமைப்புத்துறையின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த ஜூலை இறுதியிலேயே திருத்தங்களை முடித்து அரசுக்கு இறுதி அறிக்கை சமர்ப்பித்திருக்க வேண்டும். மொத்தம் 3,400 மனுக்கள் வந்துள்ளதால் ஆய்வு செய்து திருத்தங்கள் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போதைய சூழலில் 2,400 மனுக்கள் கள ஆய்வுக்கு பின்னர், உறுதி செய்து திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, 65 சதவீத திருத்த பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள மனுக்கள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பர் 2-வது வாரத்துக்குள் திருத்தங்கள் முடிந்து அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். டிசம்பர் இறுதிக்குள் புதிய மாஸ்டர் பிளானுக்கான அரசாணை வெளிவர வாய்ப்புள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE