வேலூர் கோட்டை அகழியில் பகலில் நிறம் மாறும் தண்ணீர்!

By KU BUREAU

வேலூர்: வேலூர் கோட்டை அகழியில் தேங்கியுள்ள தண்ணீர் பகல் நேரத்தில் மஞ்சள், மாலை நேரத்தில் பச்சை நிறமாக மாறுவதால் தண்ணீர் மாதிரிகளை குடிநீர் வடிகால் வாரிய ஆய்வுக்காக அனுப்பி வைக்க தொல்லியல் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வேலூரில் 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட வேலூர் கோட்டை பல வரலாற்று சுவடுகளை தாங்கி இன்றளவும் நிற்கிறது.

இந்தியாவிலேயே அகழியுடன் சிறப்பாக கட்டப்பட்டு்ள்ள கோட்டையாக வேலூர் கோட்டை திகழ்கிறது. வேலூர் மாநகரின் முதன்மை சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி இந்திய சுதந்திர வரலாற்றில் முதல் படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.

ஆங்கி லேயர்கள் ஆட்சி காலத்தில் வேலூர் மலைகளில் இருந்து வரும் மழைநீர் அகழியை நிரப்பவும், அகழி நிறையும் நேரத்தில் உபரிநீர் தனி கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டு பாலாற்றில் கலக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேலூர் கோட்டை அகழியில் தேங்கியுள்ள நீர் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் அடிக்கடி நிறம் மாறி வருகிறது. பல நேரங்களில் பாசி படர்ந்த பசுமை படர்ந்து காணப்படும் நீர் நேற்று வழக்கத்துக்கு மாறாக மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. நேற்று மாலை மீண்டும் பசுமை நிறத்துக்கு மாறியது.

அகழியில் நிறம் மாறும் தண்ணீரை கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து விட்டுச் செல்கின்றனர். அதேநேரம், தண்ணீரில் என்ன கலந்திருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக் கையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வேலூர் கோட்டை தொல்லியல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘மழைக் காலத்தில் கோட்டை அகழிக்கு வந்த தண்ணீரால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என கருதுகிறோம்.

இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கடிதம் எழுதி இருந்தோம். அவர்கள், தண்ணீர் மாதிரிகளை சேகரித்து அனுப்பி வைக்குமாறு இரண்டு நாட்களுக்கு முன்பு பதில் அனுப்பியுள்ளனர். அதன்பேரில், சென்னையில் இருந்து தொல்லியல் துறை அதிகாரிகள் விரைவில் வேலூர் வரவுள்ளனர்.

அவர்கள் முன்னிலையில் தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அவர்கள் அளிக்கும் பரிந்துரையின்படி அடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்படும். பொதுவாக தண்ணீர் கெட்டுப் போனால் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசும். அதுபோன்ற நிகழ்வு எதுவும் இல்லை. எனவே, ஆய்வுக்கு பிறகே அதற்கான காரணம் தெரியவரும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE