பிஹார், ஒடிசாவில் சலுகைகள்: தமிழகம் திரும்பாத 30% வடமாநில தொழிலாளர்கள் - தாக்கம் என்ன?

By இல.ராஜகோபால்

கோவை: ஒடிசா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்படும் சலுகைகளால் சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்களில் 30 சதவீதம் பேர் மீண்டும் தமிழகம் திரும்புவதில்லை என்றும், தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு சலுகைகளை உள்ளடக்கிய புதிய தொழில் கொள்கையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாட்டில் கட்டுமானம், வார்ப்படம், ஜவுளித்தொழில் உள்ளிட்ட உற்பத்தித்துறை சார்ந்த பல தொழில்களில் தொடங்கி ஹோட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சேவைத்துறையின்கீழ் செயல்படும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என கூறும் தொழில்துறையினர் ஒடிசா, பிஹார் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் தொழில்துறைக்கு சலுகைகள் அதிகம் வழங்கப்படுவதால் சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்களில் பலர் மீண்டும் திரும்புவதில்லை என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: தமிழகத்தில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின்போது பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இவ்வாறு செல்பவர்கள் அங்கு விவசாய அறுவடை கால பணிகள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்ற பின் மீண்டும் தமிழகத்துக்கு பணிக்கு திரும்புவது வழக்கம். தமிழகத்தில் தொழில்துறைக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சலுகைகள் வழங்கப்படவில்லை. உயர்த்தப்பட்ட மின்கட்டணம் உள்ளிட்டவை தொழில்துறையினருக்கு சுமையை அதிகரித்துள்ளது.

மறுபுறம் ஒடிசா உள்ளிட்டபல வடமாநிலங்களில் தொழில் வளர்ச்சிக்கு அம்மாநில அரசுகள் சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த மாநிலங்களில் ஜவுளித் தொழில்துறையினருக்கு (ஆட்டோ லூம், பவர் லூம்) மின்கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை சலுகை வழங்கப்படுகிறது.

தவிர தொழிலாளர்களுக்கு ஊதியம்வழங்குவதை ஊக்குவிக்க மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் மானியத் தொகை வழங்கப்படுகிறது. முதலீட்டு மானியம், இயந்திரங்களுக்கு மானியம், நிலத்துக்கு மானியம் என பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் இயந்திரங்களுக்கு வழங்கப்படும் மானியம் நிலுவையில் உள்ளது. தமிழக மின்சாரத்துறையில் உற்பத்தித்துறையின்கீழ் மட்டும் 3.50 லட்சம் தாழ்வழுத்த மின் இணைப்புகள் உள்ளன. 10,500 உயரழுத்த மின்நுகர்வோர் உள்ளனர்.

தமிழகத்தில் வணிக வரியாக மட்டும் மாதந்தோறும் ரூ.9,500 கோடி உற்பத்தித்துறை மற்றும் சேவைத்துறை நிறுவனங்கள் செலுத்தி வரும் நிலையில், தமிழக அரசு ஓராண்டுக்கு தொழில்துறைக்கு ரூ.2,310 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது யானை பசிக்கு சோளப்பொரி போன்றது.

சொந்த மாநிலத்திலேயே தொழில்துறை வளர்ச்சி அடைந்து வருவதால், வடமாநில தொழிலாளர்களில் 30 சதவீதத்தினர் மீண்டும் தமிழகம் திரும்புவதில்லை.

தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டுஅரசு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்ப பெறவும், மானியம் உள்ளிட்ட பல சலுகைகள்அடங்கிய புதிய தொழில் கொள்கையை விரைவில் அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எதிர் வரும் மூன்றாண்டுகளில் தமிழகம் தொழில்துறையில் பின்தங்கிய மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, “மஹாராஷ்டிரா, ஒடிசா, பிஹார் மட்டுமின்றி ஜம்மு, காஷ்மீரிலும் அம்மாநில அரசுகள் ‘ஓபன் எண்ட்’ ஜவுளித்துறையில் அதிக கவனம் செலுத்தி உதவி வருகின்றன. இதனால் இவ்வாண்டு சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்களில் பலர் மீண்டும் தமிழகம் திரும்புவது சந்தேகம்தான்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் கழிவுப் பஞ்சை மூலப்பொருளாக கொண்டு செயல்படும் நூற்பாலைகளில் மிகுந்த நெருக்கடியான சூழல் ஏற்படும். தொழிலாளர்கள் ஊர் சென்ற காரணத்தால் தற்போது நூற்பாலைகளில் 50 சதவீதம் மட்டுமே உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

150 மாவட்டங்களை கடந்து வரும் வடமாநில தொழிலாளர்கள்: ‘ஆர்டிஎப்’ தொழில் அமைப்பின் தலைவர் ஜெயபால் கூறும்போது, “வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் 150 மாவட்டங்களை கடந்து வருகின்றனர். அதிக ஊதியம், சலுகைகள் எந்த மாவட்டத்தில் கிடைக்கிறதோ அங்கு செல்ல அவர்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது.

எனவே, தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில் தமிழக அரசு தொழில்துறைக்கு சலுகைகளை வழங்க வேண்டும். அதே போல் ஜவுளித் தொழில்துறையினரும் வட மாநில தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE