வயலை சுற்றி ‘சேலையில் வேலி’ - காட்டுப் பன்றிகளுடன் போராடும் ஓசூர் உரிகம் விவசாயிகள்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: உரிகம் பகுதியில் நிலக்கடலை மகசூலை வீடு சேர்க்க விவசாயிகள் காட்டுப் பன்றிகளுடன் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக வயலைச் சுற்றி சேலைகளில் வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, உரிகம், கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இங்கு பருவ மழையை எதிர்பார்த்து நிலக்கடலை, கேழ்வரகு, எள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

100 ஏக்கரில் சாகுபடி: உரிகம், அஞ்செட்டி சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நிலக்கடலை சாகுபடி நேரத்தில் காட்டுப் பன்றிகள் வயல்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.

தற்போது, உரிகம் பகுதியில் பரவலாகப் பெய்த மழையின் மூலம் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து காய்கள் பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக நிலக்கடலை வயல்களில் புகுந்து செடிகளைத் தோண்டி சேதப்படுத்தி வருகின்றன. மேலும், கூட்டம், கூட்டமாக வயல்களில் சுற்றுவதால், செடிகளும் சேதமடைந்து வருகின்றன.

காலி பாட்டிலில் தோரணம்: காட்டுப் பன்றிகளிடமிருந்து நிலக்கடலை செடிகளைப் பாதுகாக்க வயலைச் சுற்றிலும் அகழி அமைத்தும், பழைய சேலைகளை வேலியாகக் கட்டியும், காலி பாட்டில்களைத் தோரணங்களாகக் கட்டி வேலி அமைத்தும் பாதுகாத்து வருகின்றனர்.

காற்றின் வேகத்துக்கு வேலிகளிலிருந்து எழும்பும் சத்தத்துக்கு காட்டுப் பன்றிகள் அஞ்சி வயல்களுக்கு வருவதில்லை. மேலும், இரவு நேரங்களில் வயல்களில் உள்ள பரண்களில் அமர்ந்து காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி நஞ்சப்பன் கூறியதாவது: உரிகம், கோட்டையூர், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள் ஆகியவற்றை அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறோம். குறிப்பாக இங்கு நல்ல மண்வளம் உள்ளதால், நிலக்கடலை தரமாகவும், சுவையாகவும் இருக்கும்.

கடலை மிட்டாய்: இதனால், இங்கு விளையும் நிலக்கடலையைக் கோவில்பட்டி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடலை மிட்டாய் தயாரிக்க வியாபாரிகள் நேரடியாகக் கொள்முதல் செய்கின்றனர்.

ஆண்டுதோறும் நிலக்கடலை சாகுபடி செய்யும்போது, காட்டுப் பன்றிகள், பறவைகள், யானைகள் வயல்களில் புகுந்து சேதம் விளைவிக்கின்றன.

இதனால், விவசாயிகளுக்கு முழு மகசூல் கிடைக்காமல் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வன விலங்குகளிடமிருந்து செடிகளைக் காக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றி வருகிறோம்.

யானைகள் வலசை: இதனிடையே, தற்போது கர்நாடக மாநிலம் வனப்பகுதியி லிருந்து ஓசூர் வனப்பகுதிக்கு யானைகள் வலசை வரத்தொடங்கி உள்ளதால், நிலக்கடைலை முழு வெள்ளாமை கிடைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் காட்டுப் பன்றிகள் மற்றும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE