3600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் - நொய்யல் ஆற்றில் கண்டெடுப்பு

By ஆர்.ஆதித்தன்

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ் நொய்யல் ஆற்றின் சிற்றோடை பாய்ந்தோடும் கோவை மாவட்டம் பூலுவப்பட்டியை அடுத்த மலை கிராமமான மோளப்பாளையம், இரும்பு காலத்துக்கு முந்தைய புதிய கற்கால மக்களின் வாழ்விடமாக இருந்தது அகழாய்வில் தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினரால் கடந்த
2019-ல் அகழாய்வு செய்யப்பட்டது. இதில், தொல்லியல் அகழாய்வுகளில் கி.மு. 1600-1400 ஆண்டுகளுக்கு இடையே வாழ்ந்த புதிய கற்கால மக்களின் தொல்லியல் சான்றுகள் வெளிப்பட்டுள்ளன.

இதன்தொடர்ச்சியாக இங்கு வாழ்ந்த மக்களின் தொடக்க நிலைப் பண்பாடுகளைப் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை தலைவர் வீ.செல்வகுமார் தலைமையிலான 20 பேர் கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள் குழுவினர் கோவை மோளப்பாளையத்தில் கடந்த 2 மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஓரிரு நாளில் இந்த அகழாய்வு பணிகள் நிறைவு பெற உள்ளன.

இதுகுறித்து, தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை தலைவர் வீ.செல்வகுமார் கூறியதாவது: தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பழங்கால வரலாற்றை அறிய வேண்டு மானால் தொடக்க காலத்திற்கு செல்ல வேண்டும். கற்கால சான்றுகள் சென்னைக்கு அருகே கிடைத் துள்ளன.

புதிய கற்கால பண்பாடு ஏன் முக்கியமெனில் முதன் முதலாக பானைகளை செய்தது இந்த மக்கள் தான். ஆடு, மாடு வளர்த்து வேளாண்மை செய்தது அவர்கள் தான். ஆடு, மாடு வளர்க்கும்போது பால் கறந்து சேமித்து வைக்கவும், வேளாண் பொருட்களை சேமித்து வைக்கவும் மண் பானைகளை செய்ய தொடங்கியுள்ளனர்.

இந்த புதிய கற்கால மக்களின் சான்றுகள் ஆந்திரம், கர்நாடகம், தமிழகத்தில் வடமேற்கு பகுதியில் குறிப்பாக வேலூர் அருகே பையம்பள்ளி, கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதியில் கிடைத்துள்ளன. ஆனால், தென் தமிழகத்தில் புதிய கற்கால சான்றுகள் வெளிப்படவில்லை. புதிய கற்காலத்தில் தான் ஆடு, மாடு வளர்த்து வேளாண்மை செய்தனர்.

இது மாறுபட்ட பண்பாடு ஆகும். இதன் சான்று தென்னிந்தியாவில் கி.மு.3000 முதல் 1,200க்கு இடைபட்ட காலத்தை சேர்ந்தது என வரையறுக்கப்பட்டது. கோவை, மதுரை பகுதியில் இதற்கான சான்று தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

கோவை மோளப்பாளையம் மூன்று பக்கமும் மலைகள் சூழ்ந்த புதிய கற்கால மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளது. அதற்கான சான்றுகள் 2019-ல் பானை ஓடுகளை கண்டெடுத்து ஆய்வு செய்த போது தெரியவந்தது. இவை தென்னிந்திய புதிய கற்காலத்தோடு ஒற்றுமையாக உள்ளது.

அம்மிக்கல், தானியங்களை அரைக்கப் பயன்படுத்தப்படும் அரவை கற்களும் நிறைய கிடைத்தன. புதிய கற்கால பானைகள் மெதுவாக சுற்றக்கூடிய சக்கரத்தில் கையால் செய்யப்பட்டதாகும்.

இந்தப் புதிய கற்கால சான்றுகள் கிடைத்திருப்பது அரிதாகும். 2021-ல் அகழாய்வு செய்த போது மூன்று எலும்புக் கூடுகள் கிடைத்தன. நிறைய சஙகு சார்ந்த கடல் பொருட்கள் கிடைத்தன. புதிய கற்கால சான்றுகள் அமெரிக்காவின் பீட்டா ஆய்வகத்தில் கால கணிப்பு செய்த போது கி.மு.1600 முதல் கி.மு.1400 என்பது உறுதியானது.

அகழாய்வில் கிடைத்த சான்றுகள்.

கீழடி மற்றும் கொடுமணல் ஆகிய தொல்லியல் இடங்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பண்பாடு நொய்யல் ஆற்று பகுதியில் இருந்துள்ளது என்பது கால கணிப்பு மூலம் புலப்பட்டது. அகழாய்வில் மூன்று மனித எலும்புக்கூடுகளும், அதிகமான அளவில் விலங்கு எலும்புகளும், கடல் கிளிஞ்சல், அம்மி கற்கள், அரவைக் கற்கள், கல் உருண்டைகள், தானிய விதைகள், கற்கோடரிகள், புதிய கற்காலப் பானைகள், கடற் சங்கில் செய்யப்பட்ட மணிகள், சேமிப்புக் குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கற்கால மக்கள் அதற்கு முந்தைய கால மக்கள். புதிய கற்கால மக்களின் சான்றுகள் அதிகமாக இல்லை. அதனால் இந்த இடத்தை அரிய வாழ்விடமாக பார்க்கிறோம். கோவையில் மழை வளம், நொய்யல் ஆற்று நீர், மாடுகளை மேய்க்கும் சூழல் நன்றாக இருந்துள்ளது. அதனால் இந்த இடத்தை வாழ்விடமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இத்தொல்லியல் இடத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு இங்கு கிடைத்த கடற்படுபொருட்களான சங்கு மணிகளாகும். இவை 3600 ஆண்டுகளுக்கு முன்னர், குறிஞ்சி நிலம் மட்டுமல்லாமல் நெய்தல் நிலவமைப்பும், முல்லை நிலவமைப்பும் உருவாகி இந்த இரு நிலங்களுக்கு இடையே பரிமாற்றம் நடந்திருந்தது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

அகழாய்வின் மூலம் மேற்கு தமிழகத்தில் முதன்முதலாக தெளிவான புதிய கற்காலச் சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு தொல்லியல் துறையின் அனுமதியுடன் நடத்தப்பட்ட அகழாய்விற்கு தமிழக அரசு தொல்லியல் துறை நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE