சேலம், மதுரையில் கால்பதிக்கும் டெலாய்ட்... அமெரிக்க நிறுவனம் வருகையால் அதிர்ஷ்டம்!

By காமதேனு

பிரபல அமெரிக்க நிறுவனமான டெலாய்ட், மதுரை மற்றும் சேலத்தில் தனது அலுவலகத்தை திறக்க முடிவு செய்துள்ளதால் தொழில்துறையில் இரண்டு நகரங்களும் மேலும் நல்ல வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு புதிய முதலீடுகளைச் சென்னையை மட்டுமே குறிவைத்து ஈர்க்காமல் தெற்கில் தூத்துக்குடி, மேற்கில் கிருஷ்ணகிரி என அனைத்து மாவட்டத்திலும் புதிய முதலீடுகளையும், தொழிற்சாலைகளையும் கொண்டு வருகிறது. கடந்த 5 வருடத்தில் அதிகப்படியான முதலீட்டையும், வர்த்தகத்தையும் கொங்கு மண்டலம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக சேவைத் துறையில் அதிகப்படியான முதலீட்டையும், வேலைவாய்ப்பையும் கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் கோயம்புத்தூர், திருப்பூருக்கு அடுத்தபடியாக கார்ப்பரேட் நிறுவனங்களின் கவனத்தை சேலம் மாவட்டம் ஈர்த்துள்ளது. திறன் வாய்ந்த ஊழியர்களுக்குப் பஞ்சமில்லாத மாவட்டமாக இருப்பது மட்டுமல்லாமல் சமீபத்தில் விமானச் சேவையும் துவங்கப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச அளவில் கார்ப்பரேட் கணக்கியல் துறையில் பிக்4 எனப் பெருமையுடன் அழைக்கப்படும் நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் டெலாய்ட் நிறுவனம் சேலத்தில் புதிதாக ஒரு அலுவலகத்தைத் திறக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தைத் தொடர்ந்து மதுரையிலும் டெலாய்ட் தனது புதிய அலுவலகத்தைத் திறக்க உள்ளது.

டெலாய்ட் நிறுவனம் இந்தியாவில் 16 நகரங்களில் 16 அலுவலகங்களை வைத்திருக்கும் நிலையில் சேலம் மற்றும் மதுரையில் திறக்கப்படும் அலுவலகம் மூலம் மொத்த நகரங்கள் பட்டியல் 18 ஆக உயர உள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் தி லேசம் நியூ என்ற எக்ஸ் தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சேலத்தின் அதிரடி பொருளாதார வளர்ச்சிப் பாதையின் துவக்கமாக டெலாய்ட் நிறுவனத்தின் வருகை பார்க்கப்படுகிறது. சேலத்தில் ஏற்கெனவே ஐடி பார்க், புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் என அனைத்தையும் தயாராக இருக்கும் வேளையில் கடந்த 5 வருடத்தில் சிறிதும், பெரிதுமாக முதலீடுகள் வரத் துவங்கியுள்ளன. இந்த நிலையில் டெலாய்ட் நிறுவனத்தின் வருகை சேலத்திற்கு புதிய பரிமாணத்தை பெற்றுத்தரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE