எகிறும் தக்காளி விலை இதர காய்கனிகளின் விலையையும் சேர்த்து, ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கு வித்திட்டு வருகிறது. தக்காளியோ, வெங்காயமோ வருடாந்திரம் சாமானியர்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் காய்கனி விலை உயர்வை கட்டுக்குள் வைக்க முடியாதா?
ஒற்றை இலக்கம் வரைகூட விலை குறைந்து விற்பனையாகி வந்த தக்காளியின் கிலோ விலை, திடீரென 3 இலக்கத்தை தொட்டதில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் பின்னணியில் மழை இல்லை, வரத்து குறைவு என வழக்கமான பல்லவியே இந்த முறையும் தொடர்கிறது.
தக்காளி, வெங்காயம் போன்ற அன்றாட சமையலுக்கு அத்தியாவசியமான காய்கனிகளின் விளைச்சல், வரத்து, சந்தையில் இருப்பு, விற்பனை ஆகியவை தொடர் கண்காணிப்பை கோருபவை. அதில் விளைந்த தடுமாற்றமே, தற்போது ஆப்பிள் விலைக்கு, தக்காளியை எகிறச் செய்துள்ளது. கிலோ ரூ.150 வரை விற்பனையாகும் தக்காளியின் விலை, ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல பாடங்களையும் போதித்து வருகிறது.
’விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் - அவற்றை விலைகொடுத்து வாங்கும் நுகர்வோர்’ என இருதரப்புக்கும் பலனின்றி, இடைத்தரகர்கள் கொழிப்பதையும் காய்கனி விலை உயர்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த காய்கனி விலை உயர்வின் மத்தியில், திமுக அரசின் பெருமைகளில் ஒன்றான உழவர் சந்தையின் சீரமைப்பு குறித்தும் பரிசீலித்தாக வேண்டும். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் பாலமாக செயல்படும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் பொலிவிழப்பது ஆரோக்கியமானதல்ல.
தோட்டக்கலைத்துறை வாயிலாக தக்காளி சாகுபடி பரப்பை அதிகரித்தல், மானிய விலையிலான இடுபொருட்களை வழங்கல் என ஏட்டில் இருப்பதை முழுமையாக செயல்படுத்துவதுடன், விவசாயிகள் கோரும் குறைந்தபட்ச ஆதார விலையையும் நிர்ணயிக்க அரசு முன்வர வேண்டும். தக்காளி போன்று வெளிமாநிலங்களை எதிர்நோக்கும் வாய்ப்புகளை தவிர்த்து, சுய சார்புக்கான ஆதாரங்களை அலசி ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
பொதுமக்களும் தக்காளி உள்ளிட்ட எளிதில் தொட்டியில் விளையக்கூடிய காய்கனிகளை மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் என சுயமாய் விளைவிக்கும் விழிப்புணர்வுக்கு முன்வர வேண்டும். நாட்டு ரகங்களை விதைத்து, சமையலறை கழிவுகளையே உரமாக்கி, விபரீத பூச்சிக்கொல்லி மற்றும் வேதி உரங்களின்றி, இயற்கை முறையில் காய்கனிகளை, பகுதியளவிலேனும் வீட்டிலேயே உற்பத்தி செய்ய மக்களும் முன்வர வேண்டும்.
பக்க விளைவற்றதுடன், ருசியும், பறித்த பசுமையும், முழுமையான ஊட்டங்களும் கொண்ட அத்தியாவசிய காய்கனிகளை சுயமாய் விளைவித்து பலனடைந்தவர்கள், பின்னர் அதனை கைவிடமாட்டார்கள். கொரோனா காலத்தில் அலையாய் எழுந்த இந்த வீட்டுத்தோட்ட விழிப்புணர்வு, கொரோனாவுடனே தேய்ந்துபோனதை தற்போதைய தக்காளியுடனான தத்தளிப்பு உணர்த்துகிறது.
எக்கச்சக்கமாய் விலை உயர்ந்த பிறகு, பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி, நியாயவிலை அங்காடி என தக்காளி உள்ளிட்டவற்றை பெயரளவில் விற்பனை செய்வதை காட்டிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதே முன்னுதாரண ஆட்சிக்கும் அழகு சேர்க்கும். நடப்பு படிப்பினைகளில் ஆள்வோரும், சாமானியரும் பாடம் கற்போம். எக்காலத்திலும் கசக்காத விலையிலேயே தக்காளி கனியட்டும்!