சாட்ஜிபிடி சரிதம் - 31; ஏஐ காப்புரிமை எழுப்பும் கேள்விகள்!

By சைபர்சிம்மன்

ஆக்கத்திறன் கொண்ட ஏஐ படைப்பூக்கம் தொடர்பான புதிய கேள்விகளை எழுப்புவது பற்றி பார்த்தோம். ஏஐ ஆக்கங்கள் படைப்பூக்கத்திறன் கொண்டதா எனும் கேள்விக்கு விடை காண, மனித படைப்பூக்கத்தை எப்படி புரிந்து கொள்கிறோம் என்பது தொடர்பாக ஆழமான அலசலும், ஆய்வும் தேவை.

ஏஐ மேலும் திறன் பெறுமா?, படைப்பூக்கம் என்பதை ஆக்கத்திறன் ஏஐ நுட்பங்களுக்கு ஏற்ப மறுவரையறை செய்ய வேண்டுமா? என்பது போன்ற மேலும் பல கேள்விகள் எழும் நிலையில், ஏஐ ஆக்கத்திறன் வேறு ஒரு முக்கிய சிக்கலை நம் முன் வைக்கிறது.

ஏஐ ஆக்கங்களுக்கான காப்புரிமை தொடர்பாக அந்த சிக்கல் அமைகிறது.

ஏஐ உருவாக்கும் ஆக்கங்கள் படைப்பூக்க தன்மை கொண்டவையா என்பது ஒரு பக்கம் இருக்க, இந்த ஆக்கங்களுக்கான காப்புரிமை யாருக்கு(!) சொந்தம் என்பது முக்கிய கேள்வியாக அமைகிறது.

சாட்ஜிபிடி, மிட்ஜர்னி போன்ற ஆக்கத்திறன் ஏஐ சேவைகள் காரணமாக, ஏஐ கலை அல்லது ஆக்கத்திறன் கலை எனும் புதிய பிரிவு உருவாகியுள்ளது. இந்த சேவைகள் கொண்டு மிக எளிதாக கலைப்படைப்புகளை உருவாக்கி கொள்ளலாம். அதோடு தேர்ச்சி பெற்ற பல கலைஞர்கள் இந்த சேவைகளை ஒரு கருவியாக கொண்டு புதிய கலைப்படைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

இந்த பின்னணியில், ஏஐ ஆக்கங்களுக்கான காப்புரிமை தொடர்பான கேள்வி எழுகிறது.

சாட்ஜிபிடி

ஏஐ ஆக்கங்கள் காப்புரிமை கீழ் வருமா? எனும் கேள்வியை அலசும் முன்னர், காப்புரிமையின் அடிப்படையை புரிந்து கொள்வது அவசியம். காப்புரிமை தொடர்பான விமர்சனங்களும் இருக்கின்றன என்றாலும், மூல ஆக்கங்களுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பாக காப்புரிமை அமைகிறது. உலகம் முழுவதும் காப்புரிமை கருத்தாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இணைய யுகத்தில் காப்புரிமை தொடர்பான சவால்களுக்கு மத்தியில் மூல ஆக்கங்களுக்கான பாதுகாப்பு என்பது தொடர்கிறது.

காப்புரிமையில் படைப்பூக்கம் என்பதை விட மூல ஆக்கம் என்பதே அதிகம் வலியுறுத்தப்படுகிறது. மூல ஆக்கம் சார்ந்த புதிய ஆக்கங்களுக்கும் காப்புரிமை பொருந்தலாம்.

மனித ஆக்கங்களுக்கு காப்புரிமை என்பது கோராமலே வழங்கப்படும் உரிமையாக இருக்கிறது. ஆனால், ஏஐ ஆக்கங்களுக்கு காப்புரிமை பொருந்தாது என்பதே இப்போதைய புரிதலாக இருக்கிறது. அமெரிக்க நீதிமன்றத்தில் ஏஐ ஆக்கம் தொடர்பாக காப்புரிமை கோரப்பட்ட வழக்கில், மனிதர்களின் மூல ஆக்கங்களே காப்புரிமைக்கு உரியவை என்பதால், இந்த தன்மை இல்லாத ஏஐ ஆக்கங்கள் காப்புரிமை பெற முடியாதவை என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தொடுத்தவர் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியிருக்கிறார். வருங்காலத்தில் இந்த நிலை மாற வாய்ப்புள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால், ஏஐ ஆக்கங்கள் காப்புரிமை மீறல் புகார்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பது தான் இன்றைய யதார்த்தம்.

சாட்ஜிபிடி உள்ளிட்ட ஆக்கத்திறன் ஏஐ சேவைகள், மனிதர்கள் போலவே ஆக்கங்களை அளித்தாலும், அவை தாமாக அல்லது புதிதாக எதையும் உருவாக்கிவிடவில்லை என்பதையும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட மூல மனித ஆக்கங்களின் தொகுப்பில் இருந்தே ஆக்கங்களை தருகின்றன என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். சாட்ஜிபிடி எழுத்து வடிவிலான ஆக்கங்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றால் மிட்ஜர்னி, மானுட கலைச்செல்வங்கள் கொண்டு பயிற்சி பெற்றுள்ளது.

எண்ணற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் கலைஞர்களின் ஆக்கங்கள் கொண்டே ஆக்கத்திறன் ஏஐ சேவைகள் செயல்படுகின்றன. ஏற்கனவே உள்ள கலைப்படைப்புகளின் பொதுத்தன்மை அம்சங்களை கிரகித்துக்கொண்டு, அதே போன்ற புதிய ஆக்கங்களை உருவாக்கும் அல்கோரிதம்கள் மூலம் இது சாத்தியமாகிறது.

ஆக, ஆக்கத்திறன் ஏஐ சேவைகள் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட்ட தரவுகளில் காப்புரிமை பெற்ற படைப்புகளும் அநேகம் இடம்பெற்றுள்ளன என்பது காப்புரிமை மீறலாகவும் அமைகிறது. இவை முறையாக அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது இந்த சிக்கலை மேலும் மோசமாக்குகிறது. இதன் விளைவாகவே, எழுத்தாளர்களும், கலைஞர்களும் ஆக்கத்திறன் ஏஐ நிறுவனங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஹாலிவுட்டில், திரைக்கதை எழுத்தாளர்களும் ஏஐ தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.

சாட்ஜிபிடி

திரைக்கதை எழுத்தாளர்கள் போராட்டத்தை பொருத்தவரை அவர்களுக்கு சாதகமாக முடிந்திருக்கிறது. ஸ்டூடியோ உரிமையாளர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் அமைப்புக்கு இடையிலான உடன்பாடு எட்டப்பட்டு இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. ஏஐ சாதனங்கள் ஸ்டுடியோக்களால் பாதகமான முறையில் பயன்படுத்தப்படலாம் எனும் திரைக்கதை எழுத்தாளர்கள் எழுப்பிய பலவித அச்சங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த உடன்பாடு அமைந்துள்ளது.

ஏஐ சேவை உருவாக்க கூடிய திரைக்கதை மூல திரைக்கதையாக இருக்காது என்பது மட்டும் அல்ல, அது முழுமையாகவும் இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கும் இது தெரியும். ஆனால் அவர்கள் ஏஐ துணை கொண்டு ஏதோ ஒரு திரைக்கதையை உருவாக்கி கொண்டு, அதை திருத்தி மேம்படுத்த திரைக்கதை எழுத்தாளர்கள் உதவியை நாடலாம். இவ்விதமாக குறைந்த கட்டணத்தில் திரைக்கதை உருவாக்கி கொள்ளலாம். இத்தகைய பாதகமான அம்சங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு உடன்பாட்டில் உள்ளன.

இன்னொரு பக்கம் பார்த்தால், மார்கரெட் அட்வுட் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து, ஓபன் ஏஐ மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்கள் அனுமதி இல்லாமல் தங்களது படைப்புகளை ஏஐ சேவைகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தக்கூடாது என கடிதம் எழுதியுள்ளனர். ஏஐ சேவை கொண்டு நாவல்களை எழுத எந்த அவசர தேவையும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

அனுமதி பெறாமல் அல்லது உரிய தொகை கொடுக்காமல் எங்கள் படைப்புகளை பயன்படுத்துவது நியாயம் அல்ல என எழுத்தாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பட சேவை நிறுவனம் கெட்டி இமேஜும், தனது புகைப்படங்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளது.

மனித உதவி இல்லாமல் ஏஐ சேவைகளால் ஆக்கத்தில் ஈடுபட முடியாது எனும் நிலையில் எழுத்தாளர்களும், கலைஞர்களும் இந்த நவீன காப்புரிமை மீறல் தொடர்பாக விழித்துக்கொண்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். வரும் காலத்தில் இது இன்னும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

எழுத்தாளர்களின் ஆக்கங்கள் மட்டும் அல்ல, இணையத்தில் இருந்து உருவப்படும் உரையாடல்கள், சமூக ஊடக பகிர்வுகள் ஆகியவை கொண்டே ஏஐ சாட்பாட்கள் பயிற்சி பெறுகின்றன. இது பயனாளிகள் தனியுரிமை மீறுவதாகவும் அமைகிறது. இந்த விஷயத்தில் பயனாளிகள் விழிப்புணர்வு பெறுவதும் அவசியமாகிறது.

சாட்ஜிபிடி

ஏஐ ஆக்கங்கள் தொடர்பான படைப்பூக்க விவாதத்தை இப்போதைக்கு மறந்துவிடலாம். இதன் பின்னே உள்ளே காப்புரிமை சிக்கல் முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சனையாகிறது. எழுத்தாளர்கள் ஆக்கங்களை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டால் ஏஐ ஆக்கத்திறன் என்னாகும்? புதிய தரவுகள் இல்லாவிட்டால், ஆக்கத்திறன் ஏஐ சேவைகளை இயக்கும் மாதிரிகள் செயலற்று போகலாம் என கூறப்படுவதையும் கவனிக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் ஏஐ வந்தாச்சு என சொல்வதை விட்டுவிட்டு, ஏஐ சேவைகள் பின்னே உள்ள அசலான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதும் நம் காலத்து தேவை!

(சாட்ஜிபிடி சரிதம் தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE