சும்மா கிடக்கும் கட்டிடத்தை வாடகைக்கு விடும் திருச்சி பெல் நிறுவனம்!

By KU BUREAU

திருச்சி: திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏறத்தாழ 40 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டிடத்தை வாடகைக்கு விடுவதற்கு ஏல அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. திருச்சி - தஞ்சாவூர் சாலையில் திருவெறும்பூர் - துவாக்குடி பகுதியில் 1964-ம் ஆண்டில் பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் அனல் மின் நிறுவனத்துக்கு தேவையான பாய்லர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ஏறத்தாழ 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் காரணமாக இந்நிறுவனத்துக்கு பணி ஆணைகள் குறைந்ததால், நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. பணியாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டு விட்டது.

பெல் நிறுவனத்துக்கு போதிய ஆர்டர்கள் இல்லாததால், இதை நம்பியிருந்த பல சிறு, குறு தொழிலகங்கள் மூடப்பட்டு விட்டன. தற்போது செயல்படும் தொழிலகங்களும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. இந்தநிலையில், பெல் நிறுவனத்தில், திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை யொட்டியுள்ள ஒரு கட்டிடத்தை (கட்டிட எண்.79) வாடகைக்கு விடுவதற்கான முயற்சிகளை பெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களாக இருந்தால் கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.5 கோடி வரவு-செலவு மேற்கொண்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான ஏல அறிவிப்பை பெல் நிறுவனம், தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பெல் நிறுவன வட்டாரங்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: இந்த கட்டிடம்(எண் 79) தரைத்தளம் உட்பட 5 தளங்களுடன் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.

கரோனா காலத்தில், இந்த கட்டிடத்தில் இருந்த அலுவலகங்கள் படிப்படியாக வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதால், கடந்த 3 ஆண்டுகளாக இது காலியாகவே உள்ளது. இதனால், இந்த கட்டிடத்தை வாடகைக்கு விட்டு, அதிலிருந்து வருமானம் ஈட்டும் முயற்சியாக பெல் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த கட்டிடத்தில் ஒவ்வொரு தளமும் ஏறத்தாழ 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டவை. இந்தக் கட்டிடத்தில் 3 மற்றும் 4-ம் தளங்கள் அலுவலகத்துக்கான அமைப்புகளுடன் உள்ளன. இதற்கு அரசு பதிவுபெற்ற மதிப்பீட்டாளரைக் கொண்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏலத்தில் யார் பங்கேற்கிறார்களோ, அவர்களது நிறுவனத்தின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்படும் என்றனர்.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கேட்டபோது, ‘‘பெல் நிறுவனம் தற்போது வாடகைக்கு விடுவதற்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ள இடம் நகரின் மையப்பகுதியிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

மேலும், ஒரு சதுர அடிக்கு வாடகையாக ரூ.24 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சற்று அதிகமான வாடகை தான். இதைத் குறைத்தால், நிறுவனங்கள் வாடகைக்கு எடுப்பது தொடர்பாக பரிசீலிக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE