சேலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் அச்சம்!

By வி.சீனிவாசன்

சேலம்: சேலம் ஆட்சியர் பங்களாவுக்கு எதிரே அய்யந்திருமாளிகையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை சீரமைப்பு பணி செய்யாமல் அதிகாரிகள் பாராமுகம் காட்டி வருவதால், புதர் மண்டி, பாழடைந்து பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலம்-ஏற்காடு சாலையில் ஆட்சியர் பங்களாவுக்கு எதிரே அய்யந்திருமாளிகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்ட 754 அடுக்குமாடி குடியிருப்புகளில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், நீதிபதிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பல்வேறு துறை சார்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். அரசுப் பணியாளர்களுக்கான சலுகை வாடகையுடன் குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு பெரும்பாலான குடியிருப்புகளின் கான்கிரீட் பெயர்ந்து கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. பூட்டப்பட்ட வீடுகளை கவனிக்காததால் அந்த வீடுகள் பாழடைந்து வருகிறது. பல வீடுகளில் கான்கிரீட் மேற்கூரை உடைந்தும், சுவர்கள் விரிசல் ஏற்பட்டும், ஜன்னல்கள் உடைந்தும் உள்ளன. அய்யந்திருமாளிகை அரசு குடியிருப்புகளை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்களாக மாறியுள்ளன.

சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்.

இதனால், பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் அங்கு வசிப்பவர்கள் கடும் அச்சத்தில் வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மழைக்காலமாக உள்ள நிலையில், கொசு மருந்து முறையாக அடிக்காததால், கொசு கடிக்கு பயந்து கதவு, ஜன்னலை மூடியே வைத்துள்ள நிலைக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர். நோய் பரப்பும் கொசுக்களால் பலரும் தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தின் அருகே மாளிகை தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள மூன்று பங்களாக்கள் முட்புதர்கள் மண்டி, அடையாளம் தெரியாமல், உருக்குலைந்து, பாழடைந்து உள்ளது. இது அதிகாரிகளுக்கான குடியிருப்பு பங்களாவாக உள்ள நிலையிலும், மறு சீரமைப்பு செய்யாததால், வீட்டுக்கு யாரும் குடியிருக்க முன் வராமல் மூடியே உள்ளது.

குடியிருப்புகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பாராமுகம் காட்டுவதால் குடியிருப்புகளில் இந்த அவலம் நீடிக்கிறது. எனவே, அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அரசு குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE