முதுமலையில் பார்த்தீனியம் விஷ செடிகள் ஆக்கிரமிப்பு: உணவு பற்றாக்குறையால் தவிக்கும் விலங்குகள்!

By ஆர்.டி.சிவசங்கர்

முதுமலை: சர்வதேச அளவில் பிரசித்த பெற்றது முதுமலை சரணாலயம். மொத்தம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம், 2007-ம் ஆண்டு புலிகள் காப்பக மாக அறிவிக்கப்பட்டது. சிறிய பரப்பளவுடைய முதுமலையில், தமிழகத்திலேயே அதிக அளவிலான புலிகள் வசிக்கின்றன.

இங்கு சுமார் 125 புலிகள் உள்ளன. பிற புலிகள் காப்பகங்களில், சுமார் 40 சதுர கிலோ மீட்டரில் ஒரு புலி வசிக்கும் நிலையில், முதுமலையில் 7 சதுர கிலோ மீட்டரில் ஒரு புலி வசிக்கிறது. நீண்டு, நெடுக வளர்ந்துள்ள தேக்கு மரங்கள், முதுமலையின் அடையாளம்.

இந்த ஆண்டு அதீத மழைப்பொழிவால், பார்த்தீனி யம் செடிகளின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. முதுமலையை ஆக்கிரமித்துள்ள களைச் செடிகளே, வன விலங்குகளுக்கு ஆபத்தானவையாக மாறியுள்ளன என, இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநிலச் செயலாளர் எம்.எஸ்.செல்வராஜ் கூறும்போது, "முதுமலையை தேக்கு மரங்கள் மற்றும் களைச்செடிகளான லெண்டனா, உபோடோரியம், பார்த்தீனியம் ஆகியவை ஆக்கிரமித்துள்ளன.

இங்குள்ள தேக்கு மரங்களின் கீழ் எந்த தாவரமும் வளராது. அதன் விதைகளைகூட பறவைகள் உண்ணாது. மேலும், புல்வெளிகளில் வேட்டையாடும் புலிகளுக்கு தேக்கு மரங்கள் தடையாக உள்ளதால், அவை ஓடி தனது இரையை வேட்டையாட முடியாமல் போகிறது. இதனால், விலங்குகளுக்கு உணவு தட்டுபாடு ஏற்பட்டு, அவை மக்கள் குடியிருப்பு பகுதிகளை உணவுக்காக தேடி வருகின்றன. இதனால் மனித - விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது" என்றார்.

தாவரவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் ராஜன் கூறும்போது, "லெண்டனா, உபோடோரியம் செடிகளை தொடர்ந்து 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை ஒரே பகுதியில் இருந்து வேருடன் அகற்றினால் மட்டுமே, தொடர்ந்து வளராமல் இருக்கும்.

ஓராண்டு எடுத்த பின், அடுத்த ஆண்டு அகற்றவில்லையெனில், மீண்டும் அதிகளவில் வளர தொடங்கும். அதுமட்டுமின்றி, அதன் விதைகள் காற்றில் பரவி பிற இடங்களிலும் வளர தொடங்கும். இதனால், விலங்குகளுக்கான உணவு, தாவரங்கள் முழுமையாக அழிய வாய்ப்புள்ளது. இதுதவிர, விலங்குகளுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது" என்றார்.

வனத்துறையினர் கூறும்போது, "காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பார்த்தீனியம் செடிகள் பரவியுள்ளன. இவற்றை அகற்றும் பணி சவாலானது. தீ வைத்தால் அபரிமிதமாக பரவிவிடும். உப்பு தெளித்தால் செடிகள் கருகிவிடும்.

ஆனால், விலங்குகளுக்கு உப்பு சுவை பிடித்தமானதால், விஷ தன்மையுள்ள இந்த செடிகளை விலங்குகள் உண்டால் பாதிப்புக்குள்ளாகும். புலிகள் காப்பகத்தில் இயந்திரங்கள் பயன் படுத்தக்கூடாது. இதனால், முதுமலையை ஆக்கிரமித்துள்ள களைச்செடி களை அகற்றுவதில் ஆதிவாசிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

ஆண்டு முழுவதும் இப்பணி நடப்பதால், பழங்குடியினருக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது. களைச்செடிகளை அகற்றும் பணியில் பள்ளி மாணவர்களும், தன்னார்வலர்களும் ஈடுபடுகின்ற னர்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE