வேலூர்: ஒடுக்கத்தூர் வனப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வேலூர் பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சேண்பாக்கத்தில் தரைகீழ் தடுப்பணை பகுதியை கடந்து செல்லும் வெள்ளநீரை பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகியுள்ளதால் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலான கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஒடுக்கத்தூர் வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் உத்திர காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் கலக்கிறது. ஒடுக்கத்தூர் வனப்பகுதியில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அடுத்த சில நாட்களுக்கு உத்திர காவேரி ஆற்றின் வழியாக பாலாற்றில் நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலாற்றில் ஏற்பட்ட நீர்வரத்து நேற்று விரிஞ்சிபுரத்தை கடந்து சேண்பாக்கம் அருகே கட்டப்பட்டுள்ள தரைகீழ் தடுப்பணை பகுதியை கடந்து நேற்று இரவு வேலூரை அடைந்தது. வரும் நாட்களில் மழை தொடர்ந்தால் வேலூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது. விரிஞ்சிபுரம் பாலாற்றில் நேற்று சுமார் 30 கன அடி அளவுக்கு தண்ணீர் வரத்து இருப்பதாக கூறப்பட்டது.
அணைகளின் நீர் இருப்பு விவரம்: தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை 37.72 அடி உயரத்துடன் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 3.61 அடி உயரத்துடன் 42.80 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. காட்பாடி அருகேயுள்ள ராஜாதோப்பு அணை 24.57 அடி உயரத்துடன் 20.52 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 7.35 அடி உயரத்துடன் 1.24 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
» வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் கட்சியும் எதிர்ப்பு: பாஜகவுக்கு நெருக்கடி!
» அரியலூர்: மின் கசிவு காரணமாக வகுப்பறையில் புகை மூட்டம் - மாணவ, மாணவியர் மயக்கம்
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் 26.24 அடி உயரத்துடன் 112.20 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 22.34 அடி உயரத்துடன் 80.29 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
ஏரிகளில் நீர் இருப்பு விவரம்: வேலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 3-ல் மட்டும் 75% அதிகமான நீர் இருப்பு உள்ளது. 50% அதிகமாக ஒரு ஏரியிலும், 25% அதிகமாக 17 ஏரிகளிலும், 25% குறைவாக 50 ஏரிகளிலும் நீர் இருப்பு உள்ளது. 30 ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 360 ஏரிகளில் ஒரே ஒரு ஏரியில் மட்டும் 75% அதிகமான நீர் இருப்பு உள்ளது.
50% அதிகமாக 11 ஏரிகளிலும், 25% அதிகமாக 68 ஏரிகளிலும், 25% குறைவாக 199 ஏரிகளிலும் நீர் இருப்பு உள்ளது. 90 ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் ஒரே ஒரு ஏரியில் 75% அதிகமான நீர் இருப்பும், 50% அதிகமாக 4 ஏரிகளிலும், 25% அதிகமாக 11 ஏரிகளிலும், 25% குறைவாக 33 ஏரிகளிலும் நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தாலும் 120 ஏரிகளுக்கு நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன.