ஓசூர் - கெலமங்கலத்தில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு?

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பழங்குடியின மக்களுக்கான மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 28 ஊராட்சிகளில் 283 கிராமங்கள் உள்ளன. இதில், 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் 80 சதவீதம் பேர் கல்வி அறிவின்றி உள்ளனர். இதனால், அரசு சலுகைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள், சலுகைகள் இவர்களுக்கு கிடைப்பதில்லை.

மேலும், பழங்குடி மக்கள் வீடு, சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி சிரமத்துடன் வசிக்கின்றனர். அதேபோல, மருத்துவம், கல்வியும் இவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இந்நிலையில், மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு மத்திய அரசின் பிரதமர் ஜன் மன் மகா அபியான் திட்டத்தில் வீடுகள் கட்ட நிதி வழங்கப்படுகிறது.

ஆனால், இத்திட்டம் முழுமையாகப் பழங்குடி மக்களைச் சென்றடையவில்லை. மேலும், வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் இத்திட்டத்துக்கான தொகையை, பயனாளிகளின் அறியாமையைப் பயன்படுத்தியும், அவர்களை ஏமாற்றியும் அப்பணத்தை ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்டு, தரமற்ற வீடுகளை கட்டி கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர்.

இதுதொடர்பாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மலைக் கிராம பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் வழங்கப்பட்டு வீடுகளில் முறைகேடு நடந்து வருகிறது.

எனவே, கெலமங்கலம் மற்றும் தளி ஊராட்சி ஒன்றியத்தில் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு மத்திய அரசு திட்டங்களில் கட்டிக் கொடுக்கும் வீடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை ஆட்சியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சிலர் கூறும்போது, “மத்திய அரசின் பிஎம் ஜன்மன் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம் மற்றும் தளி ஊராட்சிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயனாளிகளிடமிருந்து அதிகாரிகள் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் 40 சதவீதம் தொகையை எடுத்துக் கொள்கின்றனர். மேலும், பழங்குடியினர் பெயரில் மாற்று சமூகத்தினருக்கும் வீடுகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளன” என்றனர்.

தவறு நடக்க வாய்ப்பு இல்லை: கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) சாந்தி கூறியதாவது: கெலமங்கலம் ஒன்றியத்தில் பழங்குடி மக்களுக்கு மத்திய அரசின் பிஎம் ஜன் மன் திட்டத்தில் நிகழாண்டில் 109 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பெட்டமுகிலாளம், இருதுகோட்டை, பொம்மதாத்தனூர், அனுமந்தாபுரம், சந்தனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் மலைப்பகுதி இல்லாத இடங்களில் வீடு கட்ட ரூ.5.7 லட்சமும் மலைப்பகுதியில் வீடுகள் கட்ட ரூ.5.75 லட்சமும் நிதி ஒதுக்கப்படுகிறது. 4 தவணைகளில் பயனாளிகளுக்கு நிதி வழங்கப்படும். பழங்குடி மக்களிடம் போதிய பணம் இல்லாததால், அந்த அந்த ஊராட்சித் தலைவர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கிறோம். பின்னர் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தொகை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE