ரூ.49.98 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியில் அலட்சியம் - கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே மலைக் கிராமத்தில் அவலம்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: அஞ்செட்டி அருகே நூரோந்துசாமி மலைக் கிராமத்தில் ரூ.49.98 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணியில் அலட்சியம் காட்டியதால், மழைக்கு மண் அரிப்பு ஏற்பட்டு மீண்டும் கரடு, முரடான சாலையாக மாறியுள்ளதாக மலைக் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கோட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட நூரோந்துசாமி மலைக் கிராமம் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது. இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,600 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனங்களுக்கு மத்தியில் உள்ளது. இக்கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

மலை அடிவாரத்திலிருந்து கிராமத்துக்குச் செல்லும் சாலை கரடு முரடான மண் சாலையாகவும், தெருவிளக்கு, கழிவு நீர், பொதுச் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இக்கிராமத்தில் சாலை வசதியில்லாத நிலை தொடர்கிறது. இதனால், மலை வாழ் மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஆட்சியர் கே.எம்.சரயு, நூரோந்துசாமி மலைக் கிராமத்துக்குச் சென்று அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அத்திநத்தம் முதல் நூரோந்துசாமி மலைக் கிராமம் வரை சுமார் 2 கிமீ் தூரத்துக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு ரூ.49.98 லட்சம் மதிப்பில் ஓரடுக்குச் ஜல்லி தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், இச்சாலை அமைக்க ஓரடுக்குச் ஜல்லிகள் கொட்டப்பட்டு, எம்சாண்ட் நிரவிவிடப்பட்ட நிலையில், தார் ஊற்றும் பணி கிடப்பில் போடப்பட்டது. பின்னர் பெய்த மழைக்கு மண் அரிப்பு ஏற்பட்டு, மீண்டும் இச்சாலை பழைய நிலையில் கரடு, முரடாக மாறியுள்ளது.

இதுதொடர்பாக மலை வாழ் மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமம் கர்நாடக மாநிலத்தையொட்டி உள்ளதால் அரசு சலுகைகள் முழுமையாகக் கிடைப்பதில்லை. கடந்தாண்டு ஆட்சியர் எங்கள் கிராமத்துக்கு வந்து குறைகளைக் கேட்டறிந்து ரூ.49.98 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், தரம் இல்லாத ஜல்லி, எம்சாண்ட் மணல் ஆகியவற்றை கொண்டு சாலை அமைத்தனர். அதன் பின்னர் தார் ஊற்றும் பணியைத் தொடரவில்லை. இப்பணியை அதிகாரிகளும் ஆய்வு செய்யவில்லை. சாலை அமைத்த சில மாதங்களில் பெய்த மழைக்கு எம்சாண்ட் மணல் அரிக்கப்பட்டு மீண்டும் கரடுமுரடான சாலையாக மாறி உள்ளது. புதிய சாலை வசதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

சாலை அமைக்கும் பணியில் காட்டிய அலட்சியத்தால், பல லட்ச ரூபாய் செலவு செய்தும் அதன் நோக்கம் நிறைவேறாத நிலை தொடர்வது வேதனை அளிக்கிறது. இதுதொடர்பாக ஆட்சியர் உரிய ஆய்வு செய்து, சாலைப் பணியில் அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எங்கள் கிராமத்துக்கு புதிய சாலை அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE