விருப்பாச்சி - தலையூத்து அருவியில் குளிக்கவோ, சுற்றுலா செல்லவோ தடை!

By ஆ.நல்லசிவன்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தலையூத்து அருவிக்கு தடையை மீறி குளிக்கவோ, சுற்றுலா சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையில் பாச்சலூர், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன.

அணையில் இருந்து வெளியேறும் நீர் விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாக கொட்டுகிறது. விருபாச்சியில் இருந்து 2 கி.மீ தூரம் பயணித்தால் மலையடிவாரத்தில் உள்ள கீழ் தலையூத்து அருவியை அடையலாம்.

அங்கிருந்து சில கி.மீ. தூரம் வனப்பகுதியில் கரடு, முரடான பாதையை கடந்தால் தலையூத்து அருவியை காணலாம். பல அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது காண்போரை ஆச்சரியப்படுத்தும். இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவது கூடுதல் சிறப்பு.

வனப்பகுதியில் எந்நேரமும் வன விலங்குகள் வரும் அபாயம் உள்ளது. அருவி பகுதியில் புதை மணல், நீர் சுழல், சில இடங்களில் ஆழம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு காரணமாக யாரையும் குளிக்கவோ, சுற்றுலா செல்லவோ ஒட்டன்சத்திரம் சரக வனத்துறை தடை விதித்துள்ளது.

மேலும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அருவிக்கு செல்லும் வழியில் உள்ள நல்காசி விருப்பாச்சி ஈஸ்வரர் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு, பலரும் ஆபத்தை உணராமல் அவ்வப்போது அருவிக்கு செல்வது வழக்கமாக உள்ளது.

தலையூத்து அருவிக்கு செல்லும் வழியில் வனத்துறை
சார்பில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை.

இதில் தடையை மீறி சென்ற பலர் புதை மணல், நீர் சுழலில் சிக்கி இறந்துள்ளனர். நேற்று முன்தினம் நண்பர்களுடன் சென்ற திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக்குமார் (23) அருவி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்நிலையில், ஒட்டன்சத்திரம் வனத்துறை சார்பில் தலையூத்து அருவியில் குளிக்கவோ, சுற்றுலா செல்லவோ கூடாது. தடையை மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவதை தடுக்கவும், அருவியில் குளிக்கச் செல்வோரை கண்காணிக்கவும் சுழற்சி முறையில் வனப்பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

2023 ஜூனில் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலா தலங்களாக்க ரூ.8.22 கோடியை அரசு ஒதுக்கியது. மேலும், 3 ஆண்டுகளில் பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டது.

இருப்பினும் இத்திட்டம் அறிவிப்போடு நிற்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்தி அருவியை கண்டு ரசிப்பதற்கும், பாதுகாப்பாக குளிப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE