70-வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது பவானிசாகர் அணை

By KU BUREAU

ஈரோடு: ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் நீராதாரமாய் விளங்கும் பவானிசாகர் அணை நேற்று 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் பவானி ஆறும், மாயாறும் இணையும் இடத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணைக்கான கட்டுமானப் பணி, 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஏழு ஆண்டுகள் கட்டுமானப் பணி நடந்த நிலையில், 1955-ம் ஆண்டு முடிவடைந்து, ஆகஸ்ட் 19-ம் தேதி திறப்பு விழா நடந்தது. அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அணையைத் திறந்து வைத்தார்.

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாய் விளங்கும் பவானிசாகர் அணையைக் கட்ட அப்போதைய எம்.எல்.ஏ. ஈஸ்வரன் முக்கிய காரணியாய் விளங்கினார்.

அணை கட்டுவதற்கு அனுமதி தராவிட்டால், அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவேன் என்ற நிபந்தனை மூலம், பவானிசாகர் அணை கட்ட அரசின் இசைவை அவர் பெற்றுத் தந்தார். அவருக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது.

மிகப்பெரிய மண் அணை: தமிழகத்தில் மேட்டூருக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய அணையாகவும், ஆசியாவின் மிகப்பெரிய மண் அணையாகவும் போற்றப்படும் பவானிசாகர் அணை, ரூ.10.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டதாகும்.

பவானிசாகர் அணையில் 105 அடி வரை, 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். பவானிசாகர் அணையின் மூலம் நேரடியாக 2.5 லட்சம் ஏக்கர் நிலமும், மறைமுகமாக 50 ஆயிரம் ஏக்கர் நிலமும் பாசனம் பெறுகின்றன. 10-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

இதுவரை 22 முறை பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 69 ஆண்டுகளைக் கடந்து நேற்று 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பவானிசாகர் அணையை மூன்று மாவட்ட விவசாயிகளும் தெய்வமாக வணங்கிப் போற்றுகின்றனர்.

அணையின் நீர் நிலவரம்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 96.91 அடியாகவும், நீர் இருப்பு 26.37 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,269 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக 1,300 கன அடியும், தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றில் 100 கன அடி என மொத்தம் 2,200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE