அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மாவட்ட எல்லை கிராமத்திலிருந்து ஏற்காடு செல்ல சேர்வராயன் மலைத்தொடரில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகில் உள்ள பையர்நத்தம் ஊராட்சி போதக்காடு கிராமத்தில் இருந்து ஏற்காடு மலைத் தொடர் தொடங்குகிறது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து வெள்ளக்கடை, மோட்டூர், நல்லூர், ஆனைக்காடு, பெரிய ஏரிக்காடு வரையில் ஏற்கெனவே சாலை அமைக்கப்பட்டு அதன்வழியாக ஒருசிலப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலையின் முடிவிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் தருமபுரி மாவட்டம் போதக்காடு கிராமம் அமைந்துள்ளது. முற்றிலும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள பல்வேறு எஸ்டேட்களில் கூலித்தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
சாலை அமைக்க கோரிக்கை: ஆனால், இந்த 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் சாலையாகவே உள்ளது. அதில் வாகனங்களில் செல்ல பழக்கமானவர்களை தவிர பிறர் சென்று வர இயலாத நிலை உள்ளது.
» மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய பதிவு: கல்லூரி மாணவி கைது
» பம்ப்செட், வார்ப்பட நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்பு - காரணமும், புதிய திட்டமும்
ஏற்கெனவே, தருமபுரி மாவட்ட எல்லையான பையர்நத்தம் போதக்காட்டில் இருந்து மாவட்ட எல்லை வரை இருந்த மண் சாலை ரூ.74 லட்சம் மதிப்பில் தார்சாலையாக மாற்றப்பட்டது. அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சேலம் மாவட்ட எல்லை கிராமமான பெரிய ஏரிக்காடு வரை உள்ள மண் சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என மழைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள நிலையில் சேலம் மாவட்ட நிர்வாகம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். இதன்மூலம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்கள் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஏற்காட்டுக்கு எளிதாக சென்று வர முடியும் என கூறுகின்றனர்.
இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் பி.எஸ். சரவணன் கூறியதாவது: போதக்காடு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பையர்நத்தம்-போதக்காடு முதல் தருமபுரி மாவட்ட எல்லை வரை சுமார் ரூ.74 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது போதக்காட்டிலிருந்து சேலம் மாவட்ட எல்லையான பெரிய ஏரிக்காடு வரையிலான 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறை அமைச்சரும் தனி கவனத்துடன் இதனை நிறை வேற்றிட பரிந்துரை செய்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரம் உயரும்: 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைப்பதன் மூலம் ஏற்காடு மலைக் கிராமங்களான வெள்ளக்கடை, பெரிய ஏரிக்காடு, ஆனைக்காடு, புலியூர், மோட்டூர், நல்லூர் என 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பையர்நத்தம், துரிஞ்சிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும். மேலும் மலைப்பகுதியில் விளையும் விவசாய விளைப்பொருட்களை பழங்குடி மக்கள் தரைத்தளத்தில் கொண்டு வந்து விற்பனை செய்ய முடியும்.
அதன் மூலம் பொருளாதாரத்தில், வேலை வாய்ப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் மேம்பாடு அடையும். எனவே சாலை அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.