உதகை: மலைகள் என்றாலே இயற்கை, பசுமை என்ற மனதுக்குள் மத்தாப்பு எரியும் நிலையில், மலைகளில் ஒளிந்திருக்கும் மற்றொரு முகம் நிலச்சரிவு, பேரிடர். கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, அதற்கு மிகசிறந்த உதாரணம். நீலகிரி மாவட்டத்தையும் நிலச்சரிவுகள் நிலைகுலைய செய்துள்ளன. கெத்தை, மரப்பாலம் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் நினைவிலிருந்து நீங்காதவை.
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது அதிகளவு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழையால் தான் அதிகளவு நிலச்சரிவு மற்றும் மழைச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 1924-ம் ஆண்டு அவலாஞ்சி வனப்பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இது வனப்பகுதிக்குள் ஏற்பட்டதால், பொதுமக்களை பாதிக்கவில்லை.
1978 - 79ம் ஆண்டுகளில் பெய்த கன மழையால் பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவுகள், மழை வெள்ளம் புகுந்து ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதில், கூக்கல்தொரை அருகே நடந்த நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்தனர். உதகையில்ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில்வசித்த மக்களின் வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர்.
1979-ல் மஞ்சூர் அருகே தொட்டக்கம்பை பகுதியில் பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டு பெண் உட்பட 2 குழந்தைகள் மண்ணில் புதைந்தனர். அதே ஆண்டு சேலாஸ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழந்தனர். 1990-ல் மஞ்சூர் அருகே கெத்தையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், மின்வாரிய குடியிருப்பில் வசித்து வந்த 35 குடும்பங்கள்மண்ணில் புதையுண்டனர். இதில், 54 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
» ‘பாலருவி’ விரைவு ரயில் இன்று முதல் தூத்துக்குடி வரை நீட்டிப்பு: நிறைவேறிய 4 ஆண்டு கால கோரிக்கை!
» கல் குவாரியில் தொடரும் உயிரிழப்புகள் - கோவையில் கண்டுகொள்ளப்படாத விதிமுறைகள்
1993-ம் ஆண்டு குன்னூர் பகுதியில் தொடர்ந்து சில தினங்கள் பெய்த மழையால் நவம்பர் மாதம் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் பர்லியாறு, மரப்பாலம் பகுதியில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், அரசு பேருந்து நிலச்சரிவில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதில், 15 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. 2001-ம்ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், இதில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. 2002-ம் ஆண்டு பந்தலூர் பகுதியில் பெய்த மழையால், பந்தலூர் அருகே பக்னா முன்னாட் கிராமத்தில் இடி, மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், 2009-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையில் உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவு சம்பவம், நீலகிரி மாவட்ட வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு, அனைத்து தரப்பு மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், கூடலூரை அடுத்த கோக்கால் பகுதியில் பல வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள், நிலச்சரிவு அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. நீறு பூத்த நெருப்புபோல் உள்ள இந்த அச்சம், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளால் உருவாகியுள்ளது. இந்நிலையில், வருவாய் துறையினருடன் தீயணைப்பு, காவல், வனம் உட்பட அனைத்து துறைகளும் இணைந்து, நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏற்பட்டால் சமாளிக்க தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன.
வயநாட்டைபோல் நீலகிரியிலும் நிலச்சரிவு ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்ப வேண்டாம். அவ்வாறு வதந்தி பரப்பினால் காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா எச்சரித்துள்ளார். இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையின் மிக முக்கியமான மற்றும் உணர்திறன் வாய்ந்த பகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் மலை உச்சி மாநாட்டுக்கு தமிழக முதல்வர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டுமென, நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும் போது, ''யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாகவும், பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, மூன்று மாநிலங்களும் முயற்சித்தால் சர்வதேச நிபுணத்துவம், ஒத்துழைப்பு மற்றும் நிதியை ஈர்க்க முடியும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள், தனியார் துறை நிறுவனங்கள், சங்கங்கள், ஆராய்ச்சி, கல்வி நிறுவனங்கள் உட்பட மூன்று மாநிலங்களிலுள்ள சிறந்த நிபுணர்களை கொண்டு, இந்த உச்சி மாநாட்டை ஒன்றிணைக்க முடியும்.
நிலையான வளர்ச்சியில் மலைகளின் முக்கிய பங்கைக் கருத்தில்கொண்டு, உச்சிமாநாடு அதன் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான நீண்ட கால திட்டத்தை உருவாக்க முடியும். 10 ஆண்டுகளுக்கு முன்பு, நீலகிரி ஆவண மையமானது மத்திய திட்டக் குழுவுடன் இணைந்து, மலை கொள்கைக்கான கட்டமைப்பை உருவாக்க, நிலையான மற்றும் உள்ளடக்கிய மலை மேம்பாடு குறித்த தேசிய பயிலரங்குக்கு ஏற்பாடு செய்தது.
காடுகள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல், நீர், ஆறுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்துக்கான கொள்கைகள் உள்ளன. ஆனால், ஒட்டுமொத்தமாக மலைகளுக்கான பொதுவான கொள்கை எதுவும் இல்லை.ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை பின்பற்றி, பல நாடுகளும், மாநிலங்களும் மலை சட்டங்களை ஒருங்கிணைத்துள்ளன. பல நாடுகள், மலை சூழலைப் பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சூழல் நிலையான பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலமாக மலைவாழ் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும் இந்த சட்டங்களை இயற்றியுள்ளன’’ என்றார்.