இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாட்டுத் தலைவர்கள் | ஆக.15 - சுதந்திர நாள் சிறப்பு பகிர்வு

By KU BUREAU

நாடு விடுதலைப் பெற வேண்டும்; ஒவ்வொரு இந்தியனும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும்’ என்கிற பேராவலில் தேசமெங்கும் விடுதலைப் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கக் காலத்திலேயே ஆங்கிலேய அரசுக்கு எதிரான உரிமைக்குரல் தமிழகத்தில் எதிரொலிக்கத் தொடங்கியது.

‘நாடு விடுதலை பெறுவதே இலட்சியம்’ எனும் உயரிய எண்ணத்தோடு, தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து, உயிர் தியாகம் செய்த தியாகச் செம்மல்கள் நிறைந்த மாநிலங்களுள் முதன்மையானது தமிழ்நாடு. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மற்ற மாநிலங்களின் பங்கைக் காட்டிலும் அதிகமானதாகவும், வீரஞ்செறிந்ததாகவும் அமைந்துள்ளது.

அண்ணல் மகாத்மா காந்தி காட்டிய அகிம்சை வழியிலேயே அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்த எண்ணற்ற தியாகச் செம்மல்கள் வாழ்ந்தது எனும் பெருமையை உடையது நம் தமிழ்நாடு. தேசம் விடுதலை அடைய வேண்டும் எனும் நோக்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அப்படையின் அனைத்து நிலைகளிலும் முன்னிலை வகித்தவர்கள் தமிழர்கள். நேதாஜியின் அழைப்பை ஏற்று, படையில் சேருவதற்கு ஆயிரமாயிரம் தமிழர்கள் தீரத்துடன் முன்வந்தார்கள்.

வட இந்தியாவில் நடந்த சிப்பாய்ப் புரட்சி தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என வரலாற்றில் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே வெள்ளையர்களுக்கு எதிராக வேலூரில் 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் நாள் ஒரு புரட்சி நடைபெற்றது. இதன்மூலம், இந்திய சுதந்திர போராட்டத்திற்கான வேள்வி, தமிழ்நாட்டில்தான் ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், அதற்கு முன்பாக 1755-ஆம் ஆண்டு நெல்லையின் நெற்கட்டும் சேவல் கோட்டையை முற்றுகையிட்டு, வரி வசூல் செய்த ஆங்கிலேயரான கர்னல் ஹெரோனையும், அவரது படைகளையும் விரட்டியடித்து, தென்னகத்தின் சுதந்திர தாகத்துக்கு வித்திட்ட முதல் மாவீரன் பூலித்தேவன் என வரலாறு தெரிவிக்கிறது.

வ.உ.சிதம்பரனார், பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டனர். தனது இளம் வயதிலேயே அரசியல் பிரவேசம் செய்த சுப்ரமணிய சிவா, தேச விடுதலைப் போராட்டத்துக்காகத் தொடர் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டவர். ஆங்கிலேயரின் அடக்குமுறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.

எனினும், கடைசிவரை அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் சுப்பிரமணிய சிவா. அவரைப் பின்தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர் மாவீரன் வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு வாஞ்சி நாதனும் விடுதலைப் போராட்டத்தில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

வ.உ.சி.க்கு சிறை தண்டனை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன், பின்னர் தன்னையும் சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். இந்திய விடுதலைப் போராட்ட தியாகியான தமிழகத்தைச் சேர்ந்த திருப்பூர் குமரன், 1932-ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கியபோது, திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.

அப்போது, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றார். அப்போது காவலர்களால் தாக்கப்பட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக்கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து உயிர் நீத்தார். இதனால் `கொடி காத்த குமரன்’ என்று அழைக்கப்படுகிறார்.

நாடக நடிகரான விஸ்வநாத தாஸ், தனது நாடக மேடையை நாட்டின் விடுதலைக்காக மிகச் சிறப்பாகப் பயன்படுத்தினார். இவரது உணர்ச்சி மிகுந்த தேசபக்தி நாடகத்தினால் அண்ணல் காந்தியடிகளே இவரைப் பாராட்டினார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவரது ‘கொக்கு பறக்குதடி பாப்பா’ என்ற பாடல் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இவர்களைத் தவிர, மருது சகோதரர்கள், மாவீரன் தீரன் சின்னமலை, வெள்ளையத் தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், வேலு நாச்சியார், வீரத்தாய் குயிலி, கோபால நாயக்கர், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர், தியாகி சீனிவாச ராவ், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கண்ணியம்மிக்க காயிதே மில்லத், ரிபல் முத்துராமலிங்க சேதுபதி, வ.வே.சு.அய்யர், செண்பகராமன், தில்லையாடி வள்ளியம்மை, வீரர் சுந்தரலிங்கம், மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்றோரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், தங்களது பாடல்கள் மூலம் சுதந்திர வேட்கையைத் தூண்டிய மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் போன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த எண்ணற்ற தலைவர்களும், பொது மக்களும்இந்திய விடுதலைக்காக எண்ணிலடங்கா தியாகங்களைச் செய்ததுடன், சுதந்திர உணர்வையும் பரப்பினர். நாம் பெற்ற சுதந்திரத்திற்காக இன்னுயிர் நீத்த வீரத் தியாகிகளின் தியாகத்தினை, நாம் அனைவரும் நினைவில் வைப்போம். அவர்கள் காண விரும்பிய, இந்திய சுதந்திரத்தின் பெருமைகளை என்றும் போற்றி காப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE