சிறுக சிறுக பணம் சேமிப்பு... கோவாவிற்கு விமானத்தில் பறந்த பீடி சுற்றும் தொழிலாளர்கள்!

By காமதேனு

திருநெல்வேலி மாவட்டம் தாட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் கூலித் தொழிலாளர்கள் தாங்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையில் சிறுக சிறுக பணம் சேர்த்து அதை நனவாக்கியுள்ளனர்.

விமானம்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள தாட்டான்பட்டி என்ற கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இளைஞர்கள் சிலர் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட துறைகளிலும் சேவையாற்றி வருகின்றனர்.

அப்படி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விடுமுறை நாட்களில் விமானத்தில் சொந்த ஊருக்கு வருவதை அறிந்து இப்பகுதியிலுள்ள பெண்கள் உள்ளிட்ட கிராமத்து மக்களுக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அதற்கு எவ்வளவு செலவாகும் என்று திட்டமிட்டு ஒவ்வொருவரும் ரூபாய் பத்தாயிரம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

தாட்டான்பட்டி கிராம மக்கள்.

தங்களுக்குக் கூலியாக கிடைக்கும் பணத்திலிருந்து ஒவ்வொரு நாளும் சிறிது பணத்தை எடுத்து விமான பயணத்திற்கு என ஒதுக்கி வைத்தனர். அது பத்தாயிரம் ரூபாயை இந்த மாத தொடக்கத்தில் எட்டியது. அதையடுத்து தங்கள் பகுதி பங்குத்தந்தையிடம் சென்று கோவாவில் உள்ள புனித சவேரியார் ஆலயத்திற்கு விமானத்தில் சென்று வர வேண்டும் என்று தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர்.

அருளகம் பங்குத் தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம், லூர்து சாமி, ஜோசப், பிரின்ஸ் நிக்கோலஸ், ராயப்பன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஊர் மக்கள் உள்ளிட்ட 130 பேருக்கு கோவா செல்ல விமானத்தில் டிக்கெட் எடுக்கப்பட்டது.

அதையடுத்து அவர்கள் 130 பேரும் நேற்று முன்தினம் கோவாவுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் திரும்ப ஊருக்கு வருவதற்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயண ஏற்பாட்டாளர் அருளானந்தம் கூறுகையில், “சிறுசேமிப்பு மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம். மேலும், எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என விரும்பினர் அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்று, ரயிலில் திரும்ப உள்ளோம்" என்றார்.

தங்களின் கனவு பெரியதாக இருந்தாலும் அதைச் சாதிக்க இடைவிடாமல் உழைத்து, முயற்சித்து அதை நனவாக்கி இருக்கிறார்கள் தாட்டான்பட்டி கிராம மக்கள்.

இதையும் வாசிக்கலாமே...

முற்பிறவியில் செய்த தவத்தின் பயன்: பிரதமர் நரேந்திர மோடிக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தமிழ்நாட்டில் 90 லட்சம் வீடுகளுக்கு அழைப்பிதழ், அட்சதை!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி இஸ்திரி பெட்டியால் அடித்துக் கொலை: திமுக நிர்வாகி, பாதிரியார்கள் தலைமறைவு!

‘அயோத்தி ராமர் கோயில் வெடி வைத்து தகர்க்கப்படும்...’ மிரட்டல் விடுத்த ‘தாவூத் இப்ராஹிம் கூட்டாளி’ கைது

ஜாமீனுக்குப் போராடும் செந்தில் பாலாஜி.... நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE