ஆறு ‘கழிவுநீர் ஓடை’யான கதை @ திண்டுக்கல்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: பள்ளியில் படிக்கும்போது ஒரு ஆறு தனது கதையை சொல்கிறது என கட்டுரை எழுதச் சொல்வர். அப்படி குடகனாறு தனது கதையை சொல்வது போல் எழுதினால் குடகனாறு கண்ணீர் வடித்து தனது கதையை எழுத வேண்டியிருக்கும். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி, பன்றிமலை, ஆடலூர் பகுதிகளில் இருந்து பெரியாறு, கூழையாறு என 2 ஆறுகள் ஓடி வருகின்றன.

இவை அடிவாரப் பகுதியில் இணைந்து உருவாவதுதான் குடகனாறு. இந்த ஆறு தொடங்கும் இடத்தில், மலையடிவாரப் பகுதியிலேயே காமராஜர் நீர்த்தக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து குடகனாறு மக்களுக்கு பயன்தரத் தொடங்குகிறது.

காமராஜர் நீர்த்தேக்கத்தில் தேக்கப்படும் நீர் திண்டுக்கல் மாநகரின் குடிநீர் தேவையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீர் இதன் பிறகு 50 கி.மீ. பயணித்து, மாவட்ட எல்லையில் உள்ள குடகனாறு அணையை அடைய வேண்டும்.

இந்த தூரத்தை கடக்கும் முன் ஆறு படும் வேதனைகள் சொல்லி மாளாது. குடகனாற்றில் ஆக்கிரமிப்புகளுக்கு பஞ்சமில்லை. இயல்பான குடகனாற்றின் அகலம் தற்போது பாதியாக குறைந்து பல இடங்களில் ஓடை போல் ஆகிவிட்டது. இனி ஆற்றில் எடுப்பதற்கு மணலே இல்லை என்ற அளவுக்கு சுரண்டப்பட்டு விட்டது. வரும் வழியில் மாங்கரை ஆறு குடகனாற்றில் கலக்கிறது.

ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித் தவித்து ஒருவழியாக குடகனாறு திண்டுக்கல் அருகே வந்தால் திண்டுக்கல் புறநகர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்கூடங்களில் இருந்து கழிவுநீர் கலக்கத் தொடங்கி ஆறே கழிவுநீர் ஓடையாக மாறிச் செல்கிறது. கரையோரம் உள்ள தனியார் ஆலை கழிவுநீர் ஆங்காங்கே கலப்பது தொடர்கிறது.

இதனால் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் பாதிக்கப்படுவதாக பலமுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசினாலும், எந்தவித பயனும் இருப்ப தில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கம்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதிமொழி அளிப்பதோடு சரி. எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. தாடிக்கொம்பு, வேடசந்தூர் பகுதிகளில் ஒரு காலத்தில் குளித்து மகிழ்ந்த குடக னாற்றில் தற்போது கால் வைக்கக்கூட முடியவில்லை என்கின்றனர் முதியவர்கள். ஆறு வரும் வழியில் கழிவுநீர் கலப்பதை தடுக்காததன் விளைவு, அணையில் தேங்கும் நீர் மாசுபட்டு காணப்படுகிறது.

விவசாயத்துக்கு பயன்படுத்த உகந்த நீராக இருப்பதில்லை மேலும் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது என்ற ஆதங்கம் குடகனாறு பாசன விவசாயிகளிடையே உள்ளது. அணைப்பகுதியில் இருந்து 40 கி.மீ. பயணித்து கரூர் மாவட்டம் கருவேடம்பட்டி கிராமம் அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது குடகனாறு.

திண்டுக்கல், கரூர் மாவட்டம் என மொத்தம் 109 கி.மீ. தூரம் குடகனாறு பயணித்தாலும், திண்டுக்கல் மாவட்டத்துக்குள் பயணிக்கும் போது ஆக்கிரமிப்பு, மாசுபடுதல் என ஆறு சிதைக்கப்பட்ட நிலையில்தான் பயணிக்கிறது.

குடகனாற்றை பாதுகாக்க தன்னார்வ அமைப்புகள் இயற்கை ஆர்வலர்களுடன் களம் இறங்க வேண்டும். இதற்கு ஊர் மக்களும், விவசாயிகளும் கைகொடுக்க தயாராக உள்ளனர். ஆனால், குடகனாறு பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுப்பது யார் என்ற கேள்விதான் அனைவரின் மனதிலும் உள்ளது. இந்த கேள்விக்கான விடையை கண்டுபிடித்துவிட்டால் அடுத்த தலைமுறைக்கு நாம் இயற்கையை பாதுகாத்துக் கொடுத்த பெருமை சேரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE