காரைக்குடி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான கண்டனூர்-புதுவயல் ரயில் நிலையம் சேதமடைந்துள்ளது. அவற்றை சீரமைக்க கார்த்தி சிதம்பரம் எம்.பி. குரல் கொடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
காரைக்குடி அருகே கண்டனூர்-புதுவயல் ரயில் நிலையம் உள்ளது. இதை கண்டனூர், புதுவயல் ஆகிய பேரூ ராட்சிகள் மற்றும் சுற்றி யுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வழியாக திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரயில்கள் மற்றும் தாம்பரம்-செங் கோட்டை, தாம்பரம்-ராமநாதபுரம், வேளாங்கண்ணி-எர்ணாகுளம், செகந்திராபாத்-ராமநாதபுரம் ஆகிய வாராந்திர ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், திருவாரூர்-காரைக்குடி ரயில் மட்டுமே இங்கு நின்று செல்கிறது. மேலும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல், இந்த ரயில் நிலையம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நடைமேடை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது.
ரயில் நிலையம் செல்லும் சாலையில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், பயணிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இங்கு பெரும்பாலான ரயில்கள் நிற்காததால், பலரும் காரைக்குடி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கண்டனூர்-புதுவயல் ரயில் நிலையத்தை சீரமைக்க கார்த்தி சிதம்பரம் எம்.பி. குரல் கொடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிக கழகத் தலைவர் சாமி திராவிடமணி கூறுகையில், ‘கண்டனூர்-புதுவயல் ரயில் நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி, ரயில்வே நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு டிசம்பரில் மனு அளித்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் இல்லை.
அதேபோல், கண்டனூர்-புதுவயல் சாலையில் உள்ள ரயில்வே கிராஸிங்கில் கதவு இல்லாமல் உள்ளது. அதையும் பொருத்த வேண்டும்’ என்று கூறினார்.