தொடரும் பருப்பு, பாமாயில் குளறுபடி - சீராகுமா ரேஷன் விநியோகம்?

By இல.ராஜகோபால்

கோவை: கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அரிசி, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் காலதாமதமாக வழங்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரான முறையில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,536 நியாய விலைக் கடைகள் உள்ளன. மாதந்தோறும் 11,42,536 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பாமாயில், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு நிலவியது. ஜூலை மாதத்துக்கான ஒதுக்கீடு ரேஷன் கடைகளுக்கு கடைசி வாரத்தில்தான் வந்துள்ளது.

இதனால் பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் பலருக்கு தெரியாத காரணத்தால் ஜூலை மாதத்துக்கான தொகுப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விநாயகபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், சேரன்மாநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் ஆகியோர் கூறும்போது, “கடந்த சில மாதங்களாகவே ரேஷன் கடைகளில் பொருட்கள் சீரான முறையில் வழங்கப்படுவதில்லை.

மாதத்தில் 15-ம் தேதி அல்லது 20-ம் தேதி வரை பல முறை சென்று கேட்டாலும் பொருட்கள் வரவில்லை என ஊழியர்கள் கூறுகின்றனர். வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களின் தரமும் சரியில்லை. எனவே, எதிர்வரும் மாதங்களில் சீரான முறையில் தரமான பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை அமைப்பின் தலைவர் ஜெயராமன் கூறும்போது, “கடந்த சில மாதங்களாகவே ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. சில கடைகளில் மட்டுமே பொருட்களின் இருப்பு விவரம் தகவல் பலகையில் எழுதி வைக்கப்படுகிறது.

ஒரு மாதத்தில் தொகுப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டால் அடுத்த மாதம் ஏற்கெனவே வழங்க வேண்டிய பொருட்களுடன் சேர்த்து வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தகவல் பலகையில் விவரம் எழுதுவதை கட்டாயமாக்கவும் சீரான முறையில் பொருட்களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் லோகு கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பெரும்பாலானவை கூட்டுறவு பண்டக சாலையை சேர்ந்த கடைகளாகும். ஒவ்வொரு கடைகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் சர்க்கரை, பாமாயில், கோதுமை, பருப்பு ஆகிய பொருட்களை தான் பெற்று வருகின்றனர்.

அரிசி உள்ளிட்ட இதர பொருட்களை வாங்குவதில்லை. இத்தகைய பொருட்களை பெரும்பாலும் முறைகேடான செயல்களில் ஈடுபடுவோர் வாங்கி விற்பனை செய்கின்றனர். மாதந்தோறும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்கள் என்ன பொருட்களை வாங்குகின்றனர் என்பது இணையதளம் மூலமாக சென்னையில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் கண்காணிக்கப்படுகிறது.

அதற்கேற்ப பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அவற்றை நாமும் கண்காணிக்க முடியும். பொருட்களை வாங்காமல் வாங்கியது போன்ற குறுஞ்செய்தி மொபைல் போன்களில் பெறப்படுவதாகவும் சில நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இப்பிரச்சினை மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரேஷன் கடை ஊழியர்கள் கூறும் போது, “டெண்டர் இறுதி செய்யப்படாத காரணத்தால் கடந்த சில மாதங்களாக பருப்பு, பாமாயில் சரியாக விநியோகிக்கப்படவில்லை. ஜூலை மாதத்துக்கான ஒதுக்கீடு கடைசி வாரத்தில் தான் பெறப்பட்டது. மாத இறுதிக்குள் வாங்காவிட்டால் அடுத்த மாதத்திற்கான தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். கடைகளுக்கு உரிய நேரத்தில் பொருட்கள் வந்தால் அவற்றை மக்களுக்கு வழங்குவதே எங்கள் பணி” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE