விருதுநகர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தலை தடுக்க ரேடியோ அதிர்வெண் அடையாள அட்டை அறிமுகம்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவனையில் குழந்தை கடத்தலைத் தடுக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ரேடியோ அதிர்வெண் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் கடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகிறது. இதைத் தடுக்க மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பச்சிளம் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க விருதுநகர் அரசு மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரேடியோ அதிர்வெண் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் விருதுநகர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம கர்ப்பிணி தாய்மார்கள் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரத்துற்கும் மேற்பட்டோர் சிகிச்சைபெறுகின்றனர். இதனால் விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் குழந்தை கடத்தலை தடுக்கும் விதமாக தாய்க்கு பெயருடன் பச்சை நிற அடையாள அட்டையும், அவரை மருத்துவமனையில் தங்கி பார்த்துக்கொள்பவருக்கு சிவப்பு நிற அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. குழந்தையின் இடது கணுக்காலில் நீலநிறப் பட்டை பொருத்தப்படுத்தப்படுகிறது.

இந்த அடையாள அட்டை இல்லாதவர்கள் மகப்பேறு வார்டில் இருந்து குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்லமுயன்றால் மருத்துவமனை வாசலில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் கருவி ஒலி எழுப்பும். மேலும் தாய், உடன் தங்கி இருப்பவர்களும் அடையாள அட்டை இல்லாமல் குழந்தையுடன் வெளியே சென்றால் சென்சார் கருவி ஒலி எழுப்பி அடையாளம் காண்பித்து கொடுத்து விடும். இதனால், தாய்மார்கள் மற்றும் அவரது காப்பாளர் தவிர யாரும் குழந்தையை மருத்துமனை நுழைவாயிலைத் தாண்டி எடுத்துச்செல்ல முடியாது.

இதுகுறித்து, மருத்துவமனை டீன் சீதாலட்சுமி நம்மிடம் பேசுகையில், ''விருதுநகர் அரசு மருத்துமனையில் குழந்தை திருட்டைத் தடுக்க மாவட்டத்திலேயே முதன் முறையாக ஆர்.எஃப்.ஐ.டி (ரோடியோ அதிர்வெண் அடையாளம்) என்ற தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த உடன் அதன் இடது காலில் ஒரு சென்சாருடன் கூடிய பட்டை கட்டப்படும். இதேபோன்று குழந்தையின் தாய்க்கும், அவருடன் உள்ள உதவியாளருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இவர்களது விவரங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டு விடும்.

ரேடியோ அதிர்வெண் அடையாள அட்டை இல்லாமல் யாராவது குழந்தையை தூக்கிச் சென்றால் குழந்தையின் காலில் உள்ள பட்டையை சென்சார் கருவி கண்டறிந்து உடனே ஒலி எழுப்பும். இக்கருவி மருத்துவமனையின் 3 நுழைவாயில் பகுதியிலும் பொறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துமனைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கிறார்கள். சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தாலும், இந்த நடைமுறையால் உடனே குழந்தை கடத்தப்படுவது அந்த இடத்திலேயே கண்டறிந்துவிட முடியும்.

மேலும், குழந்தையின் கையில் கட்டினால்கூட அடையாள பட்டை விழுந்து விடவும், கிழிந்து விடவும் வாய்ப்பு உள்ளதால் காலில் கட்டுகிறோம். அதோடு, குழந்தையின் காலில் அடையாள பட்டை 24 மணி நேரமும் இருப்பதை தாய், உடனிருப்பவர், செலிவியர்கள் அவ்வப்போது பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE