ஆழ்கடலில் உணவு தட்டுப்பாடு: கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கு படையெடுக்கும் அரிய வகை கடற்பறவைகள்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ஆழ்கடலில் உணவுத் தட்டுப்பாட்டால் அரிய வகை கடற்பறவைகளின் வருகை, கிழக்கு கடற்கரை பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

காடுகளில் வாழும் பறவைகளுக்கு எப்படி தனிச்சிறப்புகள் இருக்குமோ அதேபோல கடல் சார்ந்து வாழும் பறவைகளுக்கும் தனிச் சிறப்புகள் இருக்கிறது. சொல்லப் போனால் உலகில் நிலப்பரப்பைவிட 3 மடங்கு பெரியது நீர்ப்பரப்பு. கடல் சார்ந்து வாழும் உயிரினங்கள் அதிகம். மனிதன் நிலப்பரப்பில் மேற்கொண்ட ஆய்வுகளைவிட கடல் சார்ந்த பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகள் குறைவே. கடந்த பத்தாண்டுகளாக புவியின் காலநிலை மாற்றங்களின் காரணமாக கடல் பகுதிகளில் சூறாவளி, அதீத மழை, கடுமையான வெப்பம், கடல் சீற்றம் ஆகியவை ஏற்படுகின்றன.

அதன் பக்கவிளைவாக வலசை செல்லும் பறவைகளின் வாழ்வியல் மாற்றங்களையும், கடற்கரையோர பகுதி சார்ந்து வாழும் பறவைகளின் எண்ணிக்கையையும், வாழ்விடப் பறவைகளின் இனப்பெருக்கத்தையும் மதுரை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் தன்னார்வ ஆய்வாளர்களான எச்.பைஜூ, என்.ரவீந்திரன் தலைமையில் மதியழகன், மைத்திரி அடங்கிய குழு கன்னியாகுமரி முதல் பழவேற்காடு வரையிலான கிழக்கு கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

எச்.பைஜூ

இது குறித்து எச்.பைஜூ, என்.ரவீந்திரன் கூறியதாவது: பறவை ஆய்வாளர்கள் பெரும்பாலும் வாழ்விடப் பறவைகளின் இனப்பெருக்கத்தையும், பறவைகள் வலசை வரும் காலங்களில் அதன் எண்ணிக்கையை மட்டுமே கணக்கெடுப்பார்கள். இவை முறையே ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதத்துக்குள் முடிவடையும். அதன் பின்னர் நிலப்பரப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது.

ஆனால், கடல் போன்ற இடங்களில் கோடை வெப்பத்தின் தாக்கத்தைப் பொருத்து ஜூன், ஜூலை மாதங்களில் கடலின் நீரோட்டங்கள் பெரிதும் மாறத் தொடங்கும். அப்போது ஏற்படும் வானிலை மாற்றங்களால் புயல், வீசியடிக்கும் காற்று, பேரலை தாக்கங்கள், கடலின் உள் நீரோட்ட மாறுபாடுகள் ஏற்படும். இது போன்ற காலங்களில் கடல் சார்ந்து வாழும் மீன்களின் இடம்பெயர்தல் நடக்கும்.

இத்தகைய சூழலில் அரிய வகை கடல்வாழ் பறவைகளுக்கான உணவுத் தட்டுப்பாடு, அவை சார்ந்து இருக்கும் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களால் ஆழ்கடல் பகுதியில் வாழும் இந்த கடற்பறவைகள் மத்திய நிலப்பரப்பை ஒட்டி இடம் பெயரும். பொதுவாக இந்தியாவில் மேற்கு கடல் பரப்பில்தான் இதுபோன்ற அரியவகை கடற்பறவைகள் இடம் பெயர்ந்து கரையோரம் வரும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலும் இதுபோன்ற மிக அரியவகை பறவைகளின் வருகை அதிகரித்து வருகிறது.

என்.ரவீந்திரன்

இந்த ஆண்டு கடல் பறவையினங்களின் வாழ்வியல் மாற்றங்களை வனத்துறையின ருடனும், மீனவர்களுடனும் இணைந்து 3 கட்ட ஆய்வாக மேற்கொண்டோம். இதில் உயிரியல் துறையில் பயிலும் பல கல்லூரி மாணவ, மாணவியர் பங்கு கொண்டனர். தமிழகத்தின் 10-க்கும் மேற்பட்ட முக்கிய பகுதிகளில் கடற்பறவைகளின் வருகை கணக்கெடுக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோடியக்கரை, புதுச்சேரி மற்றும் பழவேற்காடு பகுதிகளில் கடந்த ஆண்டு களைவிட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் அரிய வகை கடற்பறவைகளின் வரவு பதிவு செய்யப்பட்டது.

பெரும்பாலும் இவை இந்த மாத இறுதிக்குள் அவற்றின் வாழ்விடப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விடும். ஆய்வின்படி 40-க்கும் மேலான எண்ணிக்கையில் சாம்பல் தலை ஆலாவும், பழுப்பு ஆலாவும் காண முடிந்தது. மேலும் வில்சன் கடற்குருவிகள், செங்கால் கடற்காகங்கள், ஆர்டிக் ஸ்குவா, பழுப்பு ஸ்குவா, ஆல்பட்ராஸ், வெண்புருவ ஆலா, வெண் நெற்றி ஆலா, செம்மார்பு ஆலா, செங்கழுத்து உள்ளான் போன்ற பறவைகள் கண் டறியப்பட்டன.

அதேவேளை வலசை திரும்பாத கரையோரப் பறவைகளும், பூ நாரைகளும் கணக் கெடுக்கப்பட்டன. மேலும் சமீபத்தில் புதிய பறவையினமாக அறிவிக்கப்பட்ட அனுமன் உப்புக்கொத்தி பறவைகளின் தோராய கணக்கெடுப்பும் மன்னார் வளைகுடா பகுதிகளில் எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு களைவிட இந்த ஆண்டு சாம்பல் தலை ஆலாக்களின் வரவு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE