மரபு சார் ஒளிவிளக்குகளால் இரவில் ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை​!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழகத்தில் மிகத் தொன்மையான கலச்சாரம், பண்பாடு மற்றும் வரலாற்றைக் கொண்ட மதுரை மாநகரம் சங்க காலப் பாண்டியரின் தலைநகராக விளங்கியது. சங்க இலக்கியங்களும், இந்தியாவை ஆட்சி செய்ய வந்த பிரிட்டிஷார் ஆட்சியும் மதுரையின் சிறப்பினை, பல்வேறு காலக்கட்டங்களில் வியந்து வரலாற்றில் பதிவு செய்துள்ளன.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு கி. பி 17-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நாயக்க மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவராக திகழ்ந்த திருமலை நாயக்கர் கி.பி.1636-ம் ஆண்டில் மதுரையில் அரண்மனையை கட்டினார். இந்த அரண்மனையே தற்போது அம்மன்னரின் பெயரால் திருமலை நாயக்கர் அரண்மனை என்றழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை, தற்போது நான்கில் ஒரு பங்கு மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை பாதுகாக்க தொல்லியல் துறை, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பழமை மாறாமல் பல்வேறு உயர் தொழில்நுட்பங்களை கொண்டு புதுப்பித்து வருகிறது.

திருமலை நாயக்கர் அரண்மனை சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இந்த அரண்மனை அரியணை மண்டபம், அந்தப்புரம், நாடகசாலை, பள்ளியறை, பூஜை அறை, படைக்கலன், வசந்தவாவி, மலர்வனம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. திருமலை நாயக்க மன்னரின் பேரன் சொக்கநாத நாயக்க மன்னர் தனது தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றும்போது, அரண்மனையின் ஒரு பகுதியை இடித்து திருச்சிராப்பள்ளியில் புதிய அரண்மனையை உருவாக்கினார். அப்போதுதான் இந்த அரண்மனை சிதிலமடைந்தது.

திருமலை நாயக்கர், இந்த அரண்மனையை இந்தோ-சாரசனிக் கட்டக்கலைப் பாணியில் கட்டினார். இந்துக் கோயில்களின் கட்டக்கலையும் முகமதியக் கட்டக்கலையும் இணைந்து கட்டப்படும் கலையை இந்தோசாரசனிக் கட்டடக்கலை என்றழைப்பர். பிரிட்டிஷார் ஆட்சியில் இந்த அரண்மனை 1879-ம் ஆண்டு ரூ.5 லட்சம் மதிப்பில் பராமரிக்கப்பட்டது. அதன்பின் இந்த அரண்மனை, 1972-ம் ஆண்டு தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்டச் சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. சிலவருடங்களுக்கு முன்பு வரை இந்த அரண்மனையில் சினிமா படப்பிடிப்புகள், கலை நிகழ்ச்சிகள் ஏராளம் நடந்தன. அதன்பிறகு தொல்லியல் துறை, அதற்கு தடை விதித்து தற்போது அரசு சார்ந்த சுற்றுலா நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள், இந்த அரண்மனையை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்ததின் அடிப்படையில் திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் மராட்டா அரண்மனை, தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்களில் பாதுகாப்பு, மறுசீரமைப்பு பணிகள் 16.92 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து தொல்லியல் துறை உதவிப் பொறியாளர் பாலமுருகன் கூறுகையில், ‘‘மொத்தம் ரூ.11 கோடியில் திருமலை நாயக்க அரண்மனை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது. தரைத்தளத்தில் தொன்மையை பாதுகாக்கும் வகையில் ஒரே மாதிரியான பாரம்பரிய கல் பதிக்கிறார்கள், நாடகசாலை, பள்ளியறைப் பகுதிகளில் உட்சுவர், வெளிச் சுவர், மேற்கூரை ஆகியவை புனரமைக்கப்படுகிறது. திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்குப்புறத்தில் கம்பிவேலி மற்றும் புல்வெளித்தளம் ரூ.61 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஒளி, ஒலி காட்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரண்மனை பராமரிப்பு பணி முடிந்ததும் ஒலி-ஒளி காட்சி மீண்டும் நடத்தப்படும்.

முன்பு சாதாரண முறையில் இந்த ஒலி-ஒளி காட்சி நடத்தப்பட்டது. ஆனால், தற்போது நவீன காலக்கட்டத்துக்கு தகுந்தவாறு, இந்த காட்சி மேம்படுத்தப்பட்டு லேசர் அடிப்படையில் மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடக்கிறது. பகல் நேரம் தவிர்த்து இரவு நேரத்திலும் திருமலை நாயக்கர் அரண்மனையின் எழிலைக் காண்பதற்கு உள் மற்றும் வெளிப்பகுதிகளில் ஒளியூட்டி அழகூட்டுவதற்கு மரபு சார் ஒளி விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளன. அதனால், இரவு நேரத்தில் திருமலை நாயக்கர் அரண்மனை, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மின்னொளி பணிகளும் வெள்ளோட்டம் பார்க்கப்படுகிறது. வருங்கால தலைமுறையினருக்கு இத்தகைய மரபுச் சின்னங்களைத் தொன்மை மாறாமலும் காலம் கடந்து நிலைத்து நிற்கும் வகையிலும் அரசு இப்பணிகளை மேற்கொள்கிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE